கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை அடுத்து, கொளத்தூர் ஜவஹர்நகரில் அவருக்கு எம்.எல்.ஏ. அலுவலகம் ஒதுக்கி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் மேயராக சைதை துரைசாமி வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ. அலுவலகம் ஒதுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்பட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.இதற்கிடையில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் காலி செய்யும்படி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையையும் எதிர்த்து ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், `234 எம்.எல்.ஏ.க்களுக்கும் தமிழக அரசு அலுவலகம் வழங்கியுள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக எனக்கு மட்டும் அலுவலகம் வழங்க மறுத்து அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நோக்கமுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்' என்று அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் என்.ஜோதி ஆஜரானார். மு.க.ஸ்டாலினுக்கு அலுவலகம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எனவே அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கில் 6-ந் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment