சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுகவை தோற்கடிக்கத் தான் திமுக போட்டியிடுவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் மதிமுகவுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்று திமுக யோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த மதிமுக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த தேர்தல் மூலம் மதிமுக அரசியல் மறுவாழ்வு பெற்றுவிடக் கூடாது என்று திமுக தலைமை குறியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.
சங்கரன்கோவிலில் வரும் மார்ச் மாதம் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கின்றது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அதிமுக வேட்பாளரை அறிவித்தது. ஆளுங்கட்சி வேட்பாளரான முத்துச் செல்வியும் தனது பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றேத் தீர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக இலவசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவிடம் தோற்றபோதும் திமுக இந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த மதிமுக உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தந்த ஊக்கத்தை வைத்து தற்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.
மதிமுக பொதுச் செயளாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி சங்கரன்கோவில் தொகுதியில் தான் உள்ளது. எனவே இந்த தொகுதியில் மதிமுகவுக்கு வாக்கு வங்கி உள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மதிமுக மார்க்சிஸ்ட், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு 30,000 வாக்குகளைப் பெற்றது. அடுத்து நடந்த 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 21,000 வாக்குகள் பெற்றது.
தற்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றது. அப்படி நடந்தால் தான் வரும் 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று அக்கட்சி நினைக்கிறது. ஆனால் அந்த இரண்டாவது இடத்தையும் மதிமுக பெறக்கூடாது என்று திமுக நினைக்கிறது.
சங்கரன்கோவிலில் போட்டியிடாவிட்டால் மதிமுக எளிதில் இரண்டாவது இடத்தைப் பெற்றுவிடும் என்பதாலேயே திமுக அங்கு போட்டியிடுகிறது. மதிமுக இரண்டாவது இடத்தை பெற்றுவிட்டால் அதுக்கு அரசியல் வாழ்வு கிடைத்து அடுத்த 7-8 ஆண்டுகளுக்கு நிலைப்பெற்றுவிடும். அதனை திமுக விரும்பவில்லை. திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலினை ஏற்க மனமில்லாமல் தான் வைகோ அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். அந்த மனக்கசப்பு மாறியதாகத் தெரியவில்லை.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்து தான் தான் பிரதான எதிர்கட்சி என்பதை திமுக நிரூபித்தது. அதே போன்று சங்கரன்கோவிலிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்து மதிமுகவை ஓரங்கட்ட வேண்டும் என்று திமுக தலைமை உறுதியாக இருப்பதால் தான் தேர்தல் களத்தில் குதித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment