கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிக்கர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் அணுமின்நிலையத்திற்கு எதிராக தமிழக மக்களின் ஆதரவு கேட்டு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் புதிய பஸ்நிலையம் முன்பு 4 பேர் அனுமதியின்றி பிரசாரம் செய்தனர். அவர்கள் அணுமின் பாதிப்பை விளக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகித்தும், அணுமின் நிலையத்தை மூடக்கோரியும் கோஷம் எழுப்பினர். அப்போது அங்குநின்ற பொதுமக்கள் தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு உள்ளது.
அணுமின் நிலையத்தை இயக்கினால்தான் மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியும். எனவே நீங்கள் இங்கு பிரசாரம் செய்யக்கூடாது, இங்கிருந்து செல்லுங்கள் என்றனர். இதனால் அணுமின் எதிர்ப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதமானது அவர்களுக்குள் மோதலாக உருவானது.
இதையடுத்து பொதுமக்கள் 4 பேரையும் அங்கிருந்து விரட்டியடித்து ஊருக்கே வெளியே போய் விட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்டபெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அணுமின் எதிர்ப்பாளர்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் காயல்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment