சங்கரன்கோவில் இடைத் தேர்தல் களத்தில் தற்போதைய நிலவரப்படி மதிமுகதான் படு தீவிரமாக உள்ளது. அடுத்து அதிமுக உள்ளது. 3வது இடத்தில் திமுக உள்ளது. தேமுதிகவின் நிலை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பூர்வாங்கப் பணிகளை முதலில் தொடங்கியது மதிமுகதான். இந்தத் தொகுதி உறுப்பினரான கருப்பசாமி மறைந்ததுமே அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான களப் பணிகளில் மதிமுக இறங்கியது. அதிமுகவே சற்று அயர்ந்து போகும் அளவில் படு சுறுசுறுப்பாக, பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர் மதிமுகவினர்.
சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுகவுக்கென்று கணிசமான வாக்குகள் உள்ளதால் அந்தக் கட்சி பெருத்த தெம்புடன் உள்ளது. இத்தொகுதியில் மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
அதிமுகவைப் பொறுத்தவரை வேட்பாளரை அறிவித்து விட்டார்கள். நகராட்சித் தலைவராக உள்ள முத்துலட்சுமிதான் வேட்பாளராக இறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிமுகவும் ஆரம்ப கட்டப் பணிகளை முடுக்கி விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துள்ளது.
திமுக தரப்பிலும் விருப்ப மனுக்கள் வாங்க ஆரம்பித்துள்ளனர். அது முடிந்ததும் வேட்பாளரை இறுதி செய்து திமுக ஆரம்பிக்கும். பூர்வாங்கப் பணிகள் ரேஸில் தற்போது 3வது இடத்தில்தான் இருக்கிறது திமுக.
பாமகவுக்கு இந்தத் தொகுதி சற்றும் சம்பந்தமில்லாதது என்பதால் அந்தக் கட்சியும் ஒதுங்கி ஓரம் கட்டியுள்ளது. தற்போதைய பெரும் கேள்வி தேமுதிகவின் நிலை என்ன என்பதுதான்.
சட்டசபையில் நடந்த பெரும் மோதலுக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவிலில் திராணி இருந்தால் தனித்து நின்று காட்டுங்கள் என்று தேமுதிகவுக்கு சவால் விட, ஆளுநர் ஆட்சியில் தேர்தல் நடத்துங்கள், நாங்கள் தனித்து நிற்கிறோம் என்று விஜயகாந்த்தும் பதில் சவால் விட்டுள்ளார்.
இதனால் இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா, போட்டியிடாதா என்பதில் குழப்பம் நிலவுகிறது. பேச்சுக்குத்தான் கேப்டன் அப்படிக் கூறினார். மற்றபடி போட்டியிடாமல் இருக்க மாட்டார் என்று தேமுதிக தரப்பில் கூறுகிறார்கள். இருப்பினும் தேமுதிக போட்டியிடுமா அல்லது திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்க தீர்மானிக்குமா என்பது தெரியவில்லை.
இதுவரை சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தொடர்பாக தேமுதிகவின் நிலை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே அதற்காக அக்கட்சித் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment