ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா படைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2 வாரத்தில் அமெரிக்கா இவ்வாறு தெரிவிப்பது இது 2-வது முறையாகும்.
"எல்லைப் பகுதியில் ராணுவ சூழ்நிலை அமைதியாக உள்ளது. எனினும் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கவலை அடைந்துள்ள இந்தியா தனது திறனை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ரொனால்டு பர்கீஸ் தெரிவித்தார்.
6 ஆயிரம் கிலோமீட்டர் பறந்துசென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடிவமைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பல்வேறு போர்ஆயுதங்களை சுமந்துசெல்லக்கூடிய திறன்வாய்ந்தது. இந்தியா அதை பரிசோதிக்க தீவிரமாக உள்ளது என செனட் குழுவினரிடம் ரொனால்டு பர்கீஸ் தகவல் அளித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க தேசிய புலனாய்வு மையத்தின் இயக்குநர் கிளெப்பரும் இதே தகவலைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை முற்றுகையிட்டிருக்கும் சீனா
இந்தியாவை சுற்றி வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்கெனவே சீனா தனது ராணுவ நிலைகளை வலுப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கத்வாரில் துறைமுகத்தை சீரமைத்து அங்கே தமது படைகளை நிறுத்தியுள்ளது. மாலத்தீவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்தளத்தை அமைத்திருக்கிறது
இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தை சீரமைத்து வலுவாக நிலை கொண்டிருக்கிறது. வங்கதேசத்தின் சிட்டகாங்க், மியான்மரின் காக்கோஸ் தீவுகளிலும் தமது கடற்படையை நிலைநிறுத்தியிருக்கிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமேயானால் எந்த சிரமுமின்றி இந்திய கடற்பரப்புக்குள் தமது படைகளை நிலை நிறுத்திக் கொள்ளும் திட்டத்தை நீண்டகாலமாகவே சீனா மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இந்தியாதான், இலங்கை வழியாக சீனா உள்ளே வர வலியக்கப் போய் வாசல் கதவைத் திறந்து வைத்து விட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment