ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (இ.பி.ஆர்.எல்.எப்) தலைவராக இருந்தவர் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தனிக்குழுவாக செயல்பட்டு வந்த இவர்கள் 1980களில் சென்னை வந்து தங்கி இருந்தனர்.
1986-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி சென்னை சூளை மேட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இ.பி.ஆர்.எல்.எப்.பைச் சேர்ந்தவர்கள் சுட்டதில் வாலிபர் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இ.பி.ஆர்.எல்.எப். தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் அவருடைய கூட்டாளிகள் 9 பேரும் கைதானார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
பிறகு டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 1988-ல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பணக்கார வீட்டு சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று டக்ளஸ் பல லட்சம் ரூபாய் பறிக்க முயன்றார். போலீசார் அந்த சிறுவனை மீட்டதோடு டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்தனர்.
சென்னை போலீசில் டக்ளஸ் மீது மீண்டும் வழக்கு பதிவானது. இதற்கிடையே டக்ளஸ் கொலை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார். போலீசார் தேடுவதை அறிந்ததும் சென்னையில் இருந்து தப்பி இலங்கைக்கு சென்று விட்டார். கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலங்கையில் அது போல வாழ முடியவில்லை. எனவே சிங்களர்களுடன் சேர்ந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்டார். அதற்கு பரிசாக அவருக்கு இலங்கை தொழில் துறை மந்திரி பதவி கிடைத்தது.
இந்த நிலையில் சென்னை போலீஸ் நிலையங்களில் அவர் மீதான 3 வழக்குகளும் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் டக்ளசை கைது செய்ய சென்னை கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்தது. இதனால் டக்ளஸ் சென்னை பக்கம் தலைகாட்டாமல் உள்ளார்.
இதற்கிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு டக்ளஸ் தேவானந்தா சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர், சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு நான் தார்மீக பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். துப்பாக்கி சூட்டை நடத்தியது இ.பி.ஆர்.எல்.எல்.பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதற்கு நான் தான் பொறுப்பாகும் என்றார்.
சென்னை போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்கு பற்றி அவர் கூறுகையில், அந்த வழக்குகளை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன். ஆனால் இந்த பழைய விவகாரத்தை சிலர் அரசியல் லாபத்துக்காக மீண்டும் கிளப்பியுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment