ஒரு எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயல்பட்டதே இல்லை. அவர் குறித்து முதல்வர் ஜெயலலிதா சொன்ன அத்தனை வார்த்தைகளும் மிகச் சரியானவைதான் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் அங்கு செய்தயாளர்களிடம் பேசுகையில்,
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் கடந்த 7 மாதமாக சிறப்பான முறையில் செயல்படவில்லை. சட்டசபைக்கு வெளியிலும் எந்த ஒரு மக்கள் நல பிரச்சினையிலும் அவர் ஈடுபடவில்லை.
தேமுதிக கட்சிக்கு என்று ஒரு கொள்கையோ, கோட்பாடோ இல்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மிகவும் முக்கியமான பதவி. சட்டசபையில் விஜயகாந்த் குறித்து ஜெயலலிதா பேசியது சரிதான்.
தேமுதிகவும் திராவிட கட்சிதான். அந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்.
தமிழக அரசு ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 கோடி கடனில் மூழ்கி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி கடனில் இருந்தது. இதற்கு இலவச திட்டங்கள்தான் காரணம். நான் மத்திய சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தேன். இதேபோல் தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தையும் செயல்படுத்தினேன். இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பலன் கிடைத்தது.
மருத்துவ காப்பீடு திட்டம் சரியாக செயல்படவில்லை. அரசு மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவ சிகிச்சையை மேம்படுத்த வேண்டும்.
அரசு பணிகளில் தனியார் கல்லூரியில் படித்த நர்ஸ்களில் 50 சதவீதமும், அரசு கல்லூரியில் படித்த மாணவிகளில் 50 சதவீதமும் பணியில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் பாதிப்பை, அரசு சரிசெய்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இன்னும் பல வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. புதுச்சேரியில் பயிர் இழப்பீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு ரூ.7 ஆயிரம்தான் வழங்குகிறது. இதிலும் ஏற்றத்தாழ்வு உள்ளது என்றார் அன்புமணி.
No comments:
Post a Comment