டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் இல்லம் அருகே இஸ்ரேலிய தூதரக கார் குண்டுவெடித்து சிதறியதின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் ஈரான் இதை நிராகரித்துள்ளது.
டெல்லியில் நேற்று மாலை 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், உலகிலேயே அதிக அளவில் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்ய கூடிய ஈரானே இக்குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று சாடியுள்ளது.
இதனை நிராகரித்துள்ள ஈரான், யூதர்களை மட்டுமே தனித்துவமாக முன்வைக்கும் ஜியோனிச சித்தாந்தத்தைக் கடைபிடிக்கும் இஸ்ரேல்தான் ஈரானுக்கு எதிராக உளவியல் போரை நிகழ்த்தி வருகிறது என்று பதிலளித்துள்ளது. அண்மைக்காலமாக ஈரானின் அணு விஞ்ஞானிகளை அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல்தான் படுகொலை செய்து வருவதாகவும் ஈரான் கூறியுள்ளது.
பின்னணி என்ன?
அமெரிக்காவின் மக்கள்தொகையிலும் ஆட்சி அதிகாரத்திலும் தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருப்பவர்கள் இஸ்ரேலியர்கள் (யூத இனத்தவர்கள்தான்). யூதர்களின் நலனுக்குப் பாதகமான எந்த ஒரு செயல்திட்டத்தையும் கொள்கையையும் அமெரிக்கா கடைபிடிப்பதில்லை.
சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் மென்மை முகமாக நார்வேயும் கோரமுகமாக இஸ்ரேலும் அறியப்பட்ட ஒன்று. சமாதான பேச்சுகளில் நார்வே களம் இறங்கும் எனில் போர் போன்ற விவகாரங்களில் இஸ்ரேல் இறங்கும்.
அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கை கோர்த்து ஈரான் மீது சர்வதேச தடை விதித்துள்ள நிலையில் எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற நிலையும் உள்ளது.
இதேபோல் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும் அமெரிக்காவுக்குமான போரில் இஸ்ரேல் பிரிக்க முடியாத கூட்டாளி. இதனால்தான் மும்பையில் 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலிலும் கூட இஸ்ரேலியர்களே குறிவைக்கப்பட்டனர்.
இஸ்ரேலியர்கள் ஒன்றுகூடும் இடத்தை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போதும் டெல்லியில் தாக்குதல் நடத்தப்பட்டதும் இஸ்ரேலியர்களை குறிவைத்தே.
சர்வதேச அக்கப்போரில் அமெரிக்காவுடன் மறைமுகமாக கை கோர்த்துக் கொண்டு எந்த ஒரு நாட்டுக்கும் நம்பிக்கைக்குரிய நண்பராக இந்தியா இருப்பதில்லை. இதுவே சர்வதேச நாடுகளுக்கு இடையேயான போர்க்களமாக இந்திய நகரங்கள் மாறி வருகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இதற்கிடையே, இஸ்ரேல் தூதரக அதிகாரியின் காரில் வைக்கப்பட்டது ஸ்டிக்கர் குண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது. காரின் பின்பகுதியில் இதைப் பொருத்தியுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவர் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment