சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் மாணவரால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது ஆசிரியர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாணவ-மாணவிகள் அனைவரும் மனித நேயத்துடன் அனைவருடனும் பழகவேண்டும் என்றும், நீதி கதைகளை கூறுங்கள் என்றும் பள்ளி கல்வி இயக்குனர் ப.மணி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதி அதை அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்க செய்யும்படி கூறி இருந்தார்.
இது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பெரும்பாலான பெற்றோர்கள் அவசர அவசரமாக வேலைக்கு செல்கிறார்கள். வியாபாரம் செய்யும் பெற்றோர்களும் அதே நிலைதான். பெற்றோர்கள் குழந்தைகளிடம் வாரம் ஒரு முறையாவது உட்கார்ந்து பேசவேண்டும். நல்ல நல்ல சிறுகதைகளை, அதுவும் குறிப்பாக நீதி கதைகளை கூறவேண்டும்.
பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகள் டாக்டர் ஆக வரவேண்டும், என்ஜினீயராக வரவேண்டும் என்று சொல்கிறார்களே தவிர அவர்கள் குழந்தைகளை மனிதனாக வரவேண்டும் என்று முதலில் நினைக்க வேண்டும். மனிதநேயம், ஒழுக்கம் ஆகியவவைதான் முதலில் தேவை. அதன்பின்னர் தான் கல்வி.
ஆசிரியர்களும் மாணவர்களை பொது இடங்களில் வைத்து கண்டிக்கக்கூடாது, திட்டக்கூடாது. பிற மாணவர்கள் மத்தியில் மாணவனையோ, மாணவியையோ திட்டக்கூடாது. உதாரணமாக ஒரு மாணவர் 4 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை 5-வது நாள் பள்ளிக்கு வந்தால், எல்லா மாணவர்களும் இல்லாத நேரம் பார்த்து அந்த மாணவரை ஆசிரியர் தனியாக அழைத்து அன்பாக பேசி ஏன் நீ பள்ளிக்கு வரவில்லை என்று கேட்டால் அவன் உண்மையான பதிலை சொல்வான். அப்போது அவனிடம் அன்பாக பேசினால் வகுப்புக்கு விடுமுறை போடுவதை தவிர்ப்பான்.
மேலும் மாணவர்கள் மார்க் குறைவாக எடுத்தால் பிற மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் கண்டிப்பாக திட்டக்கூடாது. அறிவுரை கூறக்கூடாது. தனியாக அழைத்து கூறலாம். அப்படி செய்தால் மாணவர்கள் தவறு செய்யமாட்டார்கள்.பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடம் படிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது. நல்ல குணம் இருந்தால் தான் படிப்பு வரும். நல்ஒழுக்கம்தான் முதலில் தேவை. இதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைவில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து விரைவில் சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட உள்ளது.
No comments:
Post a Comment