திமுக தலைவர் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
கடந்த திமுக ஆட்சியின் போது திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலில் திமுகவை பெரும் வெற்றி பெற வைத்தவர் அழகிரி. அவரது தலைமையில் வகுக்கப்பட்ட யுக்தியைப் பயன்படுத்தி திமுக பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அழகிரிக்கு திமுகவில் செல்வாக்கு வேகமாக உயர்ந்தது. இதையடுத்து தென் பிராந்திய அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து படு வேகமாக கட்சிக்குள் தலையெடுத்தார் அழகிரி. இப்போது மு.க.ஸ்டாலினுக்கு கடும் போட்டியாகவும் அவர் உருவெடுத்துள்ளார்.
ஸ்டாலினை திமுகவின் உயர் பதவிக்கு வர விடாமல் அழகிரிதான் தீவிரமாக தடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தலைவர் பதவிக்கு ஸ்டாலினை வர விடாமல் அழகிரி தடுப்பதாகவும் பேசப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள டக் ஆப் வார் காரணமாக ஸ்டாலினாலும் மேலே போக முடியவில்லை, அழகிரியாலும் தான் எதிர்பார்க்கும் உச்சத்தை எட்ட முடியவில்லை.
இந்தநிலையில் தலைவர் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்று பகிரங்கமாகவே கூறியுள்ளார் அழகிரி.
சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. பணி தொடங்கி விட்டதா? என்று கேட்டபோது முதலில் தேதியை அறிவிக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்றார்.
அ.தி.மு.க. தரப்பில் 26 அமைச்சர்களும் களம் இறக்கி விட்டுள்ளனர். தி.மு.க.வில் மந்தநிலை உள்ளதே என்ற கேள்விக்கு, திமுக மந்த நிலையில் இல்லை. வருகிற 17-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தீவிரமாக பிரசாரம் செய்வோம் என்றார் அழகிரி.
அடுத்து முக்கியக் கேள்வியைக் கேட்டனர் செய்தியாளர்கள். திமுகவில் தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா என்று அவர்கள் கேட்டபோது, கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் அழகிரி சிரித்தபடி.
அடுத்ததாக இன்னொரு முக்கியக் கேள்வி கேட்கப்பட்டது. திமுக, தேமுதிக இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டு வருகிறதே, அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டனர். ஆனால் அதற்கு பதிலே தராமல் போய் விட்டார் அழகிரி.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு தேமுதிகவை கடுமையாக விமர்சித்து வந்தார் அழகிரி. மேலும், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால், அதற்கான விளைவை விஜயகாந்த் அனுபவிப்பார் என்றும் கூறியிருந்தார். அதேசமயம், தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல் வந்தபோது தேமுதிகவுக்கு சாதகமாகவும் பேசினார்.
இந்த நிலையில் திமுகவும், தேமுதிகவும் கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு அவர் பதில் ஏதும் தர மறுத்து விட்டார். சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு விஜயகாந்த் விமானத்தில் பயணித்தபோது அதில் அவருடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் பயணித்தார் என்பதும், இருவரும் தங்களது பயணத்தின்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் என்றும் செய்திகள் வந்தன என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment