ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் நர்ஸ் பன்வாரிதேவி. இவர் கடந்த ஆண்டு தொடக் கத்தில் பணிக்குச் சென்றவர் மாயமானார். அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருந்ததால், விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. மந்திரி ஒருவர் மற்றும் குற்றவாளிகளில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தில் நர்ஸ் பன்வாரிதேவியை மந்திரியின் உத்தரவின் பேரில் கொன்று எரித்து விட்டதாக கூறினர். நர்ஸ் கொன்று எரிக்கப்பட்ட இடத்தையும் அவர்கள் அடையாளம் காட்டினர்.
ஜோத்பூர் அருகே ஜலோடா கிராமத்தில் வாய்க்கால் அருகே பன்வாரி தேவியின் உடலை எரித்திருந்தனர். அந்த இடத்துக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், சிதையில் எஞ்சி இருந்த எலும்புகளை சேகரித்துக் கொண்டு திரும்பினர்.
சேகரிக்கப்பட்ட எலும்புகளை தனித்தனி பெட்டிகளில் அடைத்து, ரசாயன பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) அனுப்பி வைக்கப்பட்டது.
பன்வாரிதேவி மாயமான விவகாரத்தில் சஸ்பென்ஸ் நீடித்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் எரித்துக் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இது சி.பி.ஐ.க்கு கிடைத்த வெற்றி என்று மகிழ்ந்தனர். அதில் இப்போது சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சி.பி.ஐ. அதிகாரிகளால் சேகரித்து அனுப்பப்பட்ட எலும்புகளை ரசாயன பரிசோதனை செய்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வல்லுனர்கள், அதில் மிருக எலும்புகள் கலந்திருப்பதை கண்டுபிடித்தனர். ரசாயன பரிசதோனைக்கு அனுப்பப்பட்ட எலும்புகளில் இரண்டு பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகளில் மிருக எலும்புகள் இருந்துள்ளன.
இரண்டு பெட்டிகளில் மட்டுமே மனித எலும்புகள் என்று கண்டறிந்தனர். அந்த எலும்புகள் நர்ஸ் பன்வாரி தேவியின் எலும்புகள்தானா? என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி ஆய்வுக் கூட வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பன்வாரி எரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட எலும்புகளுடன் மிருக எலும்புகளும் கலந்திருப்பதால், அங்கு ஏற்கனவே மிருகம் எரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதே இடத்தில் மனித உடலை வைத்து எரித்திருக்க வேண்டும் அல்லது மனித உடல் எரிக்கப்பட்டதாக யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, மனித உடலுடன் சேர்த்து, ஏதோ ஒரு மிருகத்தை கொன்று அதனுடன் சேர்த்து எரித்திருக்க வேண்டும் என்று, சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
No comments:
Post a Comment