தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வர காரணமாக இருந்த இலவச கலர், "டிவி' திட்டம், தற்போது அக்கட்சிக்கு எதிரான பிரசார பீரங்கியாக மாறியுள்ளது, தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., ஆட்சியில் அமர, வீடுதோறும் இலவச கலர், "டிவி' உள்ளிட்ட கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளே காரணமாக இருந்தது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மூலம் ஆட்சியைப் பிடித்த தி.மு.க.,வும் பொறுப்புக்கு வந்ததும், கவர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டியது. அதிலும், வாக்காளர்களை மிகவும் கவர்ந்த இலவச கலர், "டிவி' வழங்க அதிக அக்கறை எடுத்து செயல்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் இலவச கலர், "டிவி'க்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அதை எல்காட் நிறுவனம் மூலமாகவும் கொள்முதல் செய்ய ஆரம்பித்தது.
தற்போது வரை, எல்காட் மூலம் ஒரு கோடியே 41 லட்சத்து 28 ஆயிரம் கலர், "டிவி'க்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஒரு கோடியே 37 லட்சத்து 48 ஆயிரம் "டிவி'க்கள் வினியோகம் செய்யப்பட்டு விட்டது. மீதியுள்ள "டிவி'க்கள் அனைத்தும், பல மாவட்ட அரசு அலுவலகங்களில் வினியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கலர், "டிவி'க்களை கொள்முதல் செய்ய கடந்த செப்டம்பரில் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதற்காக, தமிழக அரசு மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளது. இப்படியாக தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச கலர், "டிவி' தற்போது தி.மு.க., ஆட்சிக்கு எதிராக, பிரசாரம் செய்யும் பீரங்கியாக மாறியுள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க., சார்பில் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜா, ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீட்டில் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் சுயலாபம் அடைந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டால் ராஜா அமைச்சர் பதவியை இழந்தார். அகில இந்திய அளவில் தி.மு.க.,வுக்கு கெட்டபெயர் ஏற்பட்டது. மேலும், தி.மு.க.,வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு உள்ள கூட்டணி உறவிலும் விரிசல் தோன்ற ஆரம்பித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் விஷயத்துக்காக பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டன.
இப்படி ஸ்பெக்ட்ரம் 2ஜி விஷயம் குறித்து, ஒவ்வொரு செய்தியும் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் தினமும் வெளியாகிறது. தமிழ், ஆங்கில செய்தி சேனல்கள் இடைவிடாது, இச்செய்தியை ஒளிபரப்பி வருகின்றன.தமிழக அரசிடம் இலவச கலர், "டிவி' பெற்றுள்ள மக்களும் ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீடு ஊழல் பற்றிய செய்திகளை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். சில வாரங்களாக, அரசு அலுவலகங்கள் முதல் டீகடை பெஞ்ச் வரையிலும், வீடுகளில் பெண்கள் மத்தியிலும், அதைவிட பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் மத்தியிலும் ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் பற்றித்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம், தமிழ் நாளிதழ்களும், அரசின் இலவச கலர், "டிவி'யும் தான்.மின்சாரம் இல்லாத வீடுகளுக்கும் மின்சார இணைப்புடன் இலவச கலர், "டிவி' வழங்கியதால் அடித்தட்டு மக்கள் கூட ஸ்பெக்ட்ரம் 2ஜி முறைகேடு செய்திகள் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தெரிய இலவச கலர், "டிவி' காரணமாக அமைந்து விட்டது.
இலவச கலர், "டிவி' என்ற கவர்ச்சிகரமாக வாக்குறுதி மூலம் ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வின் நற்பெயர், "ஸ்பெக்ட்ரம்' விஷயத்தில் மக்களிடம் கெட்டுப்போகவும் இலவச கலர், "டிவி' தான் காரணமாக அமைந்து விட்டது என கூறும் தி.மு.க.,வினர், கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆட்சிக்கு வர உதவிய இலவச கலர், "டிவி' என்ற கவர்ச்சி திட்டம், தி.மு.க.,வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அளவுக்கு, "பூமராங்'காக மாறியுள்ளதை குறிப்பிட்டு, தி.மு.க.,வினர் ஒவ்வொருவரும் வருத்தம் கலந்த பயத்துடன் புலம்பி வருகின்றனர்.
No comments:
Post a Comment