திருப்பூர் நகைச்சுவை மன்றத்தின் 6-வது ஆண்டு தொடக்க விழா திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபா தலைவர் வக்கீல் வீரராகவன் தலைமை தாங்கினார்.
ராம்ராஜ் காட்டன் நாகராஜ் வரவேற்று பேசினார். சென்னை மணிகண்டன் நகைச்சுவை உரையாற்றினார். விழாவில் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் போது கூறியதாவது:- ஒவ்வொரு மனிதனும் தினசரி சிறிது நேரமாவது சிரிக்க வேண்டும்.
நாம் நமது குழந்தைகளை எந்த பள்ளியில் படிக்க வைக்கிறோம் என்பது முக்கியமல்ல. அவன் எப்படி படிக்கிறான் என்பது தான் முக்கியம். அவன் நன்றாக படித்து ஒரு டாக்டராகவோ இல்லை வக்கீலாகவோ, என்ஜீனியராகவோ அவன் விரும்பும் தொழிலுக்கு போகட்டும்.
அப்போது தான் அவன் வாழ்க்கையில் சிரிக்க முடியும். அவனை பார்த்து நாமும் சந்தோஷப்பட முடியும். அரசியலை பொறுத்த வரை 234 தொகுதிகளுக்கும் நல்ல எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். 234 எம்.எல்.ஏ.க்களும் 234 கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. அப்போது தான் நாடு நன்றாக இருக்கும்.
அதே போல் நமது நாட்டில் 100 சதவீத வாக்குப்பதிவு என்று பதிவாகிறதோ அன்று தான் மக்கள் நினைக்கும் ஆட்சி அமையும். இல்லாவிட்டால் ஆட்சியாளர்கள் நினைக்கும் ஆட்சி தான் அமையும். தனி மனித ஒழுக்கம் இருந்தால் போலீஸ், ராணுவம் தேவையில்லை. எனவே நாம் அனைவரும் ஒழுக்கமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் இதுவரை 5.600 நாடகங்கள் நடத்தியுள்ளேன். வெளி நாட்டில் 28 நாட்களில் 34 நாடகங்கள் நடத்தி லிம்கா சாதனை செய்துள்ளேன். எப்போதும் தாயை மதிப்பவன். அதனால் தான் எனக்கு பேரும், புகழும் பெருமையும் கிடைத்துள்ளது. அதே போல் நீங்களும் பெற்ற தாயை மதியுங்கள்.
எனக்கு நாட்டு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை மிகவும் பிடிக்கும். எனவே வருகிற பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நான் காங்கிரசில் இணைய உள்ளேன். இவ்வாறு எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பேசினார்
No comments:
Post a Comment