Sunday, January 9, 2011
சேலத்தில் இன்று தேமுதிக மாநாடு:கூட்டணி பற்றி இன்று அறிவிப்பாரா?
தேமுதிகவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள சேலம் தேமுதிக மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாக, அதிமுகவைத் தாக்கி தேமுதிகவினர் பெயரில் கொடுக்கப்பட்ட பத்திரிக்கை விளம்பரத்தை பதறியடித்துக் கொண்டு பலமாக நேற்று கண்டித்திருந்தார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தொடங்கிய பின்னர் பெரிய அளவில் மாநாடு எதையும் நடத்தவில்லை தேமுதிக. மாறாக வருகிற தேர்தல்களில் எல்லாம் தனியாக போட்டியிடுவதும், ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்றவற்றை நடத்துவதிலும் கட்சியை வழிகாட்டி வந்தார் விஜயகாந்த்.
தமிழக அரசியலில் தான் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதை ஆணி்த்தரமாக இல்லாவிட்டாலும் கூட, ஓரளவு நிரூபித்து விட்டார் விஜயகாந்த். இதையடுத்து அவருடன் கூட்டணி சேர கட்சிகளுக்குள் கடும் போட்டா போட்டி. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி கட்சியினரை உற்சாகமூட்டும் வகையில் வீரபாண்டியாரின் கோட்டையாக கருதப்படும் சேலத்தில் பிரமாண்ட மாநில மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் விஜயகாந்த்.
நாமக்கல் சாலையில் வீராசாமிபுதூரில் இன்று மாநாடு நடைபெறுகிறது. மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடைபெறும் இந்த மாநாடு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கட்சிக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
மாலை 4 மணிக்கு கட்சி நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர். இறுதியாக விஜயகாந்த் சிறப்புரையாற்றுகிறார். அப்போது சட்டசபைத் தேர்தல் உத்திகள், கூட்டணி குறித்து அவர் அறிவிக்கவுள்ளார். சேலம் மாநாட்டில் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்று ஏற்கனவே அவரது மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், இந்தக் கட்சியுடன்தான் கூட்டணி என்பதை நேரடியாக விஜயகாந்த் இன்று அறிவிக்க மாட்டார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. அதற்குப் பதிலாக தேமுதிக கூட்டணி அமைக்கும் என்பதை தெளிவுபடுத்துவதோடு, இந்தக் கட்சியுன் கூட்டணி வரும் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில் அவர் பேச்சு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது திமுகவை கடுமையாக சாடி அவர் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தேமுதிகவினர் பெரும் எதிர்பார்ப்புடன் சேலத்தில் குவிந்துள்ளனர். மாநாட்டையொட்டி சேலமே தேமுதிகவினர் முற்றுகையால் திமிலோகப்பட்டு வருகிறது.
மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தலும், மேடையும் போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் டிஜ்ட்டல் பேனர்கள் வெளுத்துக் கட்டி வருகின்றன. எங்கு பார்த்தாலும் விஜயகாந்த்தின் பளிச் சிரிப்பு போஸ்டர்களும், டிஜிட்டல் பேனர்களும் காணப்படுகின்றன.
மாநாட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் கூட, அதிமுக பாணியில், தேமுதிகவும், சிறப்புப் பாதுகாப்புப் படையை தனது தொண்டர்களைக் கொண்டு அமைத்துள்ளது.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment