நடிகர் கார்த்தி நடித்த “சிறுத்தை” படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அவரது வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் சிவக்குமாரின் மகன் கார்த்தி “பருத்தி வீரன்” படத்தில் அறிமுகமானார். “ஆயிரத்தில் ஒருவன்”, “பையா”, “நான் மகான் அல்ல” போன்ற படங்களில் நடித்துள்ள இவர் “சிறுத்தை” என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இதில் போலீஸ் அதிகாரி, பிக்பாக்கெட் திருடன் ஆகிய 2 கதாபாத்திரங்களை ஏற்று கார்த்தி நடித்துள்ளார். பிக்பாக்கெட் திருடன் கேரக்டருக்கு ராக்கெட் ராஜா என்று பெயர் சூட்டியுள்ளனர். இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தென்மாவட்டத்தில் உள்ள ஒரு சமுதாயத்தை சேர்ந்த ராக்கெட் ராஜாவின் பெயரை, பிக்பாக்கெட் திருடன் கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டுள்ளதற்கு ஆட்சேபம் தெரிவித்து, கார்த்தியின் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து பாண்டி பஜார் கிருஷ்ணா தெருவில் உள்ள நடிகர் கார்த்தியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராக்கெட் ராஜா என்ற பெயரை நீக்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment