உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சச்சின், லியாண்டர் பயஸ் போன்றவர்களைப் போல் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக உருவாக வேண்டும் என, விரும்புபவரா நீங்கள்? நம் குழந்தை எந்த விளையாட்டில் சிறந்து விளங்குவான், அவனை எந்த விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுத்துவது என, கணிப்பதில் குழப்பமாக உள்ளதா? இனிமேல் உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம். உங்கள் குழந்தை எந்த விளையாட்டுக்கு தகுதியானவன் என்பதை மரபணு சோதனை மூலம் இனி கண்டறிந்து விடலாம். ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், உண்மை தான்.
உலகில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் அறிவியல் வளர்ச்சியால், வியக்கத்தக்க மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மரபணு சோதனை மூலம், குழந்தைகளின் விளையாட்டுத் திறனை கண்டறியும் வசதியும் தற்போது வந்துவிட்டது. தலைநகர் டில்லியில் இதற்காக பிரத்தியேகமான ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் காலை 8 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு பெற்றோரின் முகத்திலும் ஒரு இனம் புரியாத ஆர்வம். சில பெற்றோர், பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தைகளைக் கூட தூக்கிக் கொண்டு வந்திருந்தனர். சச்சின், தோனி, சாய்னா நேவால் போல், தங்கள் குழந்தைகளும் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களாகி, பணத்தையும், பரிசுகளையும் குவித்து விடுவர் என்ற ஆர்வம் தான் இதற்கு காரணம். சும்மாவா இருக்கிறது. பெரும் புகழ் கிடைப்பதோடு, கோடிகளிலும் புரளலாமே.
டில்லியில் உள்ள ஆய்வகத்தில் தனது குழந்தையுடன் காத்திருந்த மனிஷா (ஆரம்பப்பள்ளி ஆசிரியை) என்ற பெண் கூறியதாவது: என் குழந்தை எதிர்காலத்தில் மிகப் புகழ் பெற்ற வீராங்கனை ஆகிவிடுவாள் என்பதை நினைத்துப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது. என் குழந்தைக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்கள், கோப்பைகள், மெடல்கள் ஆகியவற்றை வைப்பதற்கே, ஒரு அறையை ஒதுக்கி விடுவேன். என் வீட்டுக்கு வரும் தோழிகளிடம் அதைக் காட்டி, பெருமைப்படுவேன். என் குழந்தை பேட்மிண்டன், டென்னிஸ் என, இரு விளையாட்டுகளில் ஆர்வமாக இருக்கிறாள். இந்த இரண்டில், எந்த விளையாட்டில் அவளை ஈடுபடுத்துவது என்பதில் குழப்பமாக உள்ளது. மரபணு சோதனை மூலம், அவள் எந்த விளையாட்டுக்கு தகுதியானவள் என, தெரிந்து விடும். அதற்காகவே இங்கு வந்துள்ளேன். மனிஷா இவ்வாறு மகிழ்ச்சியுடன் கூறினார்.
மரபணு சோதனைக்கான ஆய்வகத்தை நடத்தி வரும், சூப்பர் ரிலிகேர் ஆய்வகத்தின் தலைமை நிர்வாகி சஞ்சீவ் இதுகுறித்து கூறியதாவது: மரபணுக்களில் 20 ஆயிரம் வகைகள் உள்ளன. இவற்றில், ஏ.சி.டி.என்-3 என்ற மரபணுவும் அடக்கம். இந்த மரபணு, விளையாட்டுத் திறனுடன் தொடர்புடையது என, 2003ல் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உங்கள் குழந்தை கடினமான விளையாட்டுக்கு தகுதியுடையதா அல்லது எளிமையான விளையாட்டுத் திறனுக்கு தகுதி பெற்றதா என, கண்டறிய முடியும். அதற்கேற்ற வகையில் குழந்தைகளை, அந்தந்த விளையாட்டில் ஈடுபடுத்தி, முழுமையான பயிற்சி அளித்து, மிகச் சிறந்த விளையாட்டு வீரராக்கி விடலாம். ஏ.சி.டி.என்-3 மரபணு இரண்டு தன்மைகளை கொண்டது. இவற்றில் முதல் வகை, "ஆர்' என அழைக்கப்படுகிறது. இந்த "ஆர்' வகை மரபணு, மனித உடலில் புரோட்டீன்களை அதிக அளவில் உருவாக்கும். இந்த மரபணுக்களை உடைய குழந்தைகள், கடின திறன் கொண்ட விளையாட்டுக்கு தகுதி பெற்றவர்கள். இவர்கள், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுக்கு ஏற்றவர்கள். அதிக நேரம் களைப்படையாமல், இவர்களால் களத்தில் இருக்க முடியும். மற்றொரு வகை, "எக்ஸ்' தன்மையுடையவை. இந்த மரபணுக்களை கொண்டவர்கள், கிரிக்கெட், கோல்ப் போன்ற எளிமையான விளையாட்டுகளில் பயிற்சி பெற்றால், எதிர்காலத்தில் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக மாற முடியும். இவ்வாறு சஞ்சீவ் கூறினார்.
இருந்தாலும், இந்த மரபணு சோதனைக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மையத்தைச் சேர்ந்த பால்ராஜ் மிட்டல் கூறியதாவது:!ஒருவரின் விளையாட்டுத் திறனை, ஏ.சி.டி.என்-3 என்ற ஒரேயொரு மரபணு மட்டும் தீர்மானித்து விட முடியாது. மற்ற மரபணுக்களையும், மரபணுக்கள் அல்லாத பிற விஷயங்களையும் பொருத்து தான் அவற்றை தீர்மானிக்க முடியும். ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல தடகள விளையாட்டு வீரர் ஒருவர், நீளம் தாண்டுதல் என்ற அதிக திறன் கொண்ட விளையாட்டில் சிறந்து விளங்குகிறார். ஆனால், அவரது மரபணு ஆர் தன்மையுடையது இல்லை என, நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வெற்றியில் மரபணுவின் பங்கு வெறும் 20 லிருந்து 30 சதவீதம் மட்டும் தான். வர்த்தக நோக்கத்தில் தற்போது இந்த ஏ.சி.டி.என்-3 மரபணு சோதனை பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பால்ராஜ் மிட்டல் கூறினார். தமிழகத்தில் நாகர்கோவிலில் உள்ள ஆய்வகத்திலும் இந்த மரபணு சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment