எல்.ஐ.சி பாலிஸி மாதிரி ரஜினிக்கும் பாலிஸி உண்டு... அது ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் ஆண்டு கணக்கில் இடைவெளி எடுத்துக் கொள்வது. ‘எந்திரன்’ படத்துக்கு பிறகு அந்த கொள்கையை கிடப்பில் போட்டு விட்டார். மூன்று வருஷத்துக்கும் மேலாக முடியாமல் அனாமத்தாக கிடக்கும் ‘சுல்தான் தி வாரியர்’ அனிமேஷன் படம்தான் ரஜினி விரதத்தை உடைத்து இருக்கிறது.
இதுகுறித்து ஏற்கெனவே சௌந்தர்யாவின் அனிமேஷன் ஸ்டுடியோவில் பணியாற்றும் முக்கியபுள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘ஆக்கர் ஸ்டுடியா அமைத்து பிறபடங்களுக்கு அனிமேஷன் வேலை செய்து செவ்வனே சென்று கொண்டிருந்தார், சௌந்தர்யா. அப்பா ரஜினியை வைத்து யார் யாரோ படத்தை டைரக்ஷன் செய்கிறார்களே நாம் செய்தால் என்ன? என்கிற ஆசை மேடம் மனசை மாம்பழத்து வண்டாய் குடைந்தது. ஒரு நெகிழ்வான நேரத்தில் அப்பாவிடம் தன் அவாவைச் சொல்ல... முதலில் ‘‘நோ... நோ... அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது...’’ என்று தடாலடியாக முதலில் மறுத்தவர் கடைசியில் மகளின் அன்பில் கரைந்து போனார்.
சுல்தான் தயாராகும் வேலையில் சுறுசுறுப்பாக மொத்த யூனிட்டே இயங்கியது. 500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்டுவந்த மன்னன் போரில் தன்நாட்டின் பகுதியை பறி கொடுக்கின்றான். திரைகடல் ஒடி திரவியம் தேடிச்சென்ற மன்னனின் நண்பன் சுல்தான் தமிழகம் திரும்புகிறான். விஷயத்தை கேள்விப்பட்டு படைகளை திரட்டிப்போய் பறிகொடுத்த பகுதியை மீட்டு வருகிறான். இதுதான் சுல்தான் அனிமேஷன் படத்தின் கதை. முதலில் ‘ஹரா’ (ஹரிஹரன்) என்றுதான் பேர் சூட்டினார்கள். ஏற்கெனவே முஸ்லீம் பெயரில் வெளிவந்த ‘பாட்ஷா’ கமர்ஷியல் ரீதியாக சக்கைபோடு போட்டதால் சென்டிமென்ட்டாக சுல்தான் என்கிற இஸ்லாமிய பேரை சூட்டினர்.
ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவில் அல்லும், பகலும் ‘சுல்தான் தி வாரியர்’ உருவானது. வெளிப்படத்தின் வேலைகளைகூட தள்ளி வைத்துவிட்டு ரஜினியின் அனிமேஷன் படம் வளர ஆரம்பித்தது.
நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என்று மகள் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் ரஜினி சென்று அனிமேஷன் படத்துக்காக கடுமையாக போஸ் கொடுத்தார். உலகின் அதிநவீன தொழில்நுட்பம் தெரிந்த ஜாம்பவான்கள் அனிமேஷன் ரஜினியை உருவாக்கினார்கள். ரஜினியின் உடம்பில் ஒயர்களை சொருகி எலக்ட்ரானிக் முறை மூலம் இன்னொரு 2டி ரஜினியை இஞ்ச் பை இஞ்ச்சாக உருவாக்கினர்.
3டி படத்தை அதற்கான கண்ணாடி அணிந்தால்தான் பார்க்க முடியும். ஆனால் ரஜினியின் 2டி அனிமேஷன் படத்தை தமிழ்நாட்டு கிராமத்தில் இருக்கும் டூரிங் தியேட்டர்களில்கூட பார்த்து ரசிக்கலாம். சுல்தானாக இருக்கும் அனிமேஷன் உருவம் ரஜினியை போலவே நடக்கும், ஸ்டைல் செய்யும், மேனஸிம் காட்டும், பேசும், சிகரெட்டை மேலே தூக்கிப்போட்டு லாவகமாக உதடுகளால் கவ்வும்.
அனிமேஷன் ரஜினிக்கு அழிவே கிடையாது ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் அதன் செயல்பாடுகள் கிஞ்சித்தும் மாறாது உயிர்ப்போடு வாழும். இந்த அனிமேஷன் பேட்டர்னை வைத்துக் கொண்டு ரிமோட் கண்ட்ரோல் கொண்ட பொம்மைகளை தயாரித்து விற்கலாம். ரிமோட்டை இயக்கினால் ரஜினி செய்யும் அத்துனை சேட்டைகளையும் ஸ்டைலையும் அந்த பொம்மை அட்டகாசமாக செய்யும். அதுபோல அனிமேஷன் ரஜினியை அடிப்படையாக வைத்து வீடியோ கேம்ஸ் விளையாடலாம்.
‘கோவா’படத்தை தயாரித்தார். அப்படம் கொடுத்த தோல்வியால் துவண்டு போனார், சௌ. ஆக்கர் ஸ்டியோவில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினார். ‘‘உனக்கு டைரக்ஷனும் வேணாம்... ஒண்ணும் வேணாம் பேசாம கல்யாணத்தை பண்ணிக்கிட்டு லைஃப்ல செட்டிலாகு... சுல்தான் விவகாரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்...’’ என்று சங்கடத்தில் தவித்த சௌ மனசை சமாதான படுத்தினார், ரஜினி. அதன்பிறகே சௌந்தர்யா அஸ்வின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.
இமயமலை செல்வதற்கு முன்பு திடீரென்று டைரக்டர் ரவிக்குமாரின் காதில் சுல்தான் படவிஷயத்தை சொல்லிவிட்டு போனார்.’’ என்று விளக்கம் சொல்கிறார்கள். டைரக்டர் ரவிக்குமாருக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம்,‘‘இமயவாசம் செல்லும் முன்பே ரவிக்குமாரை அழைத்து, கமலின் ‘மன்மதன் அம்பு’ படம் முழுசாக முடிந்து விட்டதா?’’ என்றவர் தொடர்ந்து ‘‘நான் ரிஷிகேஷ் போய் வருவதற்குள் சௌந்தர்யா எடுத்து முடித்து இருக்கும் ‘சுல்தான் தி வாரியர்’ அனிமேஷன் படத்தை ஒருமுறைக்கு இரண்டுமுறை பாருங்கள்... என்ன மாற்றங்கள் செய்யலாம் என்று யோசித்து வையுங்கள்’’ என்று சொல்லிவிட்டு சென்றார்.
தொடர்ந்து,‘‘ போயஸ் கார்டனில் இருக்கும் தன்னுடைய வீட்டில் சௌந்தர்யா, ரவிக்குமார், ரஜினி மூன்று பேரும் சுல்தான் பற்றிய விவாதத்தில் தீவிரமாக இருக்கின்றனர். பொதுவாக ரஜினி ‘சிவாஜி’ ‘எந்திரன்’ படத்தின் கதை, விவாதங்களை தனது கேளம்பாக்க பண்ணையில்தான் வைத்துக் கொண்டார். சுல்தான் சௌந்தர்யாவின் கனவுப்படம் என்பதால் அவருடைய பங்களிப்போடு போயஸ் கார்டனிலேயே டிஸ்கஷன் நடக்கிறது. ‘எந்திரன்’ படத்தில் ரோபோ ரஜினி ப்ளஸ் நேச்சுரல் ரஜினி இருவரும் இருப்பதைப் போலவே இதுவரை எடுத்திருக்கும் அனிமேஷன் ரஜினியோடு நிஜ ரஜினி இணைந்து மிரட்டும் விதமாக திரைக்கதையை அமைக்கச் சொல்லி ரவிக்குமாரிடம் கேட்டுள்ளார், ரஜினி. தற்போது கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களையே உதவி டைரக்டர்களாக வைத்துள்ளார், ரவிக்குமார். இரவு பகலாக கலந்துரையாடி இரண்டு, மூன்று ஆக்ஷன் திரைக்கதைகளை அமைத்திருக்கிறார், டைரக்டர். ரஜினியும், ரவிக்குமாரும் அனிமேஷன் ரஜினியும், கேஷூவல் ரஜினியும் இணைந்து உருவாகும் படத்துக்கு ஆரம்பத்தில் வைத்த ‘ஹரா’ பெயரையே மீண்டும் சூட்டி இருக்கிறார்கள்.’’ என்று விவரமாக சொன்னார்கள்.
நேச்சுரல் ரஜினிக்கு ஜோடியாக திரிஷாவை போடலாம் என்ற தகவலும் சில நாட்களாக கசிய ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment