இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நேற்று தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்து களத்தில் இறங்கியது. தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறினர். துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய விஜய் மற்றும் டெண்டுல்கர் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விஜய் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் டெண்டுல்கர் கோஹ்லி இருவரும் முறையே 24, 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். நடுவரிசையில் ஜோடி சேர்ந்த தோனி, யுவராஜ் இருவரும் சேர்ந்து நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். யுவராஜ் 53 ரன்கள் எடுத்தார். தோனி 38 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ரெய்னா, ரோஹித் சர்மா மற்றும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் ரன்சேர்க்கத் தவறினர். இறுதியில் இந்திய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 190 ரன்களே சேர்த்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ட்சோட்சோ 4 விக்கெட் வீழ்த்தினார். ஸ்டைன், மோர்கல் தலா 2 விக்கெட்களையும் போத்தா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மிக சுலபமான இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு துவக்கமே அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அந்த அணியின் அம்லா 4 ரன்களில் முனாப் படேலின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மித்தும் இங்க்ரமும் நிலைத்து ஆடினர். ஸ்மித் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்க்ரம் 25 ரன்கள் சேர்த்தார். இதன் பிறகு வந்த ஆட்டக்காரர்கள் நிலைத்து ஆடத் தவறினர். டிவில்லியர்ஸ் 8, டுமினி 13, மில்லர் 27, போத்தா 4, பர்னெல் 12, ஸ்டைன் 6, மோர்கல் 6 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.
இந்திய தரப்பில் முனாப் படேல் வேகத்தில் அசத்தினார். இவர் தென்னாப்பிரிக்காவின் 4 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். ஜாகிர் 2 விக்கெட்களையும், நெஹ்ரா, ஹர்பஜன், யுவராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தத் தொடரில் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது
.
No comments:
Post a Comment