மகிழ்ச்சி, துயரம், கொண்டாட்டம், காதல், களி என வெவ்வேறு உணர்வுநிலைகளை பாடல்களில் வழங்கியிருக்கிறீர்கள். ஆயிரம் பாடல்களில் உங்கள் சொந்த மனநிலைகளும் பிரதிபலித்திருக்கும். அதுபற்றி யோசிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?
கவிதை என்பது பொது உணர்ச்சி என்றும் பாட்டு என்பது தன்னுணர்ச்சி என்றும்கருதப்படுகிறது. இதைத்தான் ஆயிரம் பாடல்கள் முன்னுரையிலும் நான் எழுதியிருக்கிறேன். லிரிக் என்பது ஓர் ஆங்கிலச் சொல். இந்த லிரிக் என்பதற்கு தன்னுணர்ச்சிப் பாட்டு என்றுதான் பொருள். இந்த லிரிக் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தபோது கிரேக்க மொழியிலிருந்து இந்தச் சொல் பிறந்ததாக அறியமுடிந்தது. கிரேக்கத்தில் லையர் என்பது ஓர் இசைக்கருவி. ஏழு நரம்புகள் கொண்ட யாழ் என்பது அதற்குப் பொருள். கிரேக்கத்தின் வீதிகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இசைக்கருவியை வைத்துக்கொண்டு தன்னுணர்ச்சிகள், தன் சோகம், தன் காதல், தன் வெற்றி, தன் துயரத்தை தெருமுனைகளில் பாடகர்கள் பாடி வந்திருக்கிறார்கள். இந்த ‘லையர்’ என்ற தன்னுணர்ச்சிப் பாட்டின் இசைக்கருவியிலிருந்துதான் லிரிக் பிறந்தது என்கிறார்கள். எனவே லிரிக் என்பது பெரும்பாலும் தன்னுணர்ச்சி என்று கருதப்படுகிறது. இந்த தன்னுணர்ச்சி என்பது பாத்திரத்தின் உணர்ச்சி என்று நிறம்மாறியது தமிழ்த் திரைப்படப் பாட்டில்.
எனவே ஒரு பாத்திரத்தின் காதல், பாத்திரத்தின் கண்ணீர், பாத்திரத்தின் வெற்றி, பாத்திரத்தின் தோல்வி, பாத்திரத்தின் வலி, பாத்திரத்தின் தத்துவம் என்பது அந்தப் பாத்திரத்தின் குரலாக ஒலிக்கிறது. சில நேரங்களில் பாத்திரத்தின் குரலுக்கும் கவிஞனின் குரலுக்குமான இடைவெளி குலைந்துபோவதற்கு வாய்ப்பிருக்கிறது. அல்லது கவிஞனின் குரல் எதுவோ அதுவே பாத்திரத்தின் குரலாக, அல்லது பாத்திரத்தின் வலி எதுவோ அதுவே கவிஞனின் வலியாக நேர்கிற சந்தர்ப்பங்கள் பலநேரங்களில் நேர்வதுண்டு. எனக்கு காதல் அனுபவத்தில் அப்படி நேர்ந்திருக்கிறது. உழைக்கும் மக்களின் துயரங்களைப் பாடும்போதெல்லாம் அதை எனது துயரங்களாக நினைக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். கலப்பையின் நுனி, தன் காலில் பட்டால் பரவாயில்லை; மாட்டின் காலில் படக்கூடாது என்று கருதுகிற உழவர் சாதியைச் சேர்ந்தவன் நான். கலப்பையின் கொழுமுனை தன் காலில் பட்டுவிட்டால் விவசாயம் நிற்கப்போவதில்லை. மாட்டின் காலில் குத்திவிட்டால் அவனுக்கு நஷ்டம். எனவே தன்னைவிட மாடு உயர்ந்தது. இதனால்தான் மாடு என்பது செல்வம் என்று நினைக்கப்பட்டது.
இம்மாதிரியான நேரங்களில் உழைக்கும் மக்களின் வலி, வறுமையின் வலி, தன் முனைப்பு எல்லாம் பாடல்களில் வெளிப்படுகின்றன.
நான் மக்களைப் பார்த்து சில கருத்துக்களைச் சொல்ல வேண்டியிருக்கும். மனிதா மனிதா உன் விழிகள் சிவந்தால்... கனவு காணும் வாழ்க்கை யாவும்... புத்தம் புது பூமி வேண்டும்... சின்னச் சின்ன ஆசைகூட என் மனதில் இன்னும் சாகாமல் இருக்கிற குழந்தையின் குரல்தான். எல்லா பாடல்களும் அல்ல. சில பாடல்கள் எனக்கும் பாத்திரத்திற்கும் ஒத்துப்போது உண்டு.
பிரதமர் சந்திப்பையும் தவிர்த்துவிட்டு உங்கள் நூல் வெளியீட்டு விழாவுக்கு முதல்வர் வருகைதந்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்மீது அவர் கொண்டிருக்கிற காதல் என்று சொல்லலாம். ஒரு தமிழ்க் கவிஞன் மதிக்கப்படவேண்டும் என்பதாக இருக்கலாம். தமிழ்க் கவிஞன் என்பவன் சிறுபான்மை சாதியைச் சேர்ந்தவன். இந்த சிறுபான்மை சாதி மதிக்கப்படவேண்டும் என்பதற்காக முதல் அமைச்சர் அவர்கள் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கலாம். அதனால் எங்கள் மதிப்பில் அவர் பெரிதும் உயர்ந்து நிற்கிறார். பிரதமரின் சந்திப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தால் வருத்தப்பட்டிருப்பேன். முதல் நாள் தமிழுக்கு மதிப்பளித்த அந்த மாபெரும் முதல் அமைச்சர் மறுநாள் தன் கண் வலியையும் தாண்டி பிரதமரைச் சந்தித்துவிட்டார் என்கிறபோது பிரதமர் மதிப்பிலும் அவர் உயர்ந்து நிற்கிறார்.
ஆயிரம் பாடல்கள் நூல் வெளியீட்டு விழாவில், இனிமேல்தான் எழுதப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள், என்ன எழுதப் போகிறீர்கள்?
இனிமேல்தான் உலக இலக்கியம் எழுதப்போகிறேன். உள்ளூர் இலக்கியம் எழுதி வந்தேன். இனி உலக இலக்கியம். இந்த உலகம் என்ற பூபாகத்தில்தான் மனிதர்கள் வாழ்ந்து தீரவேண்டியிருக்கிறது. இதுவரைக்கும் நாம் சின்னச் சின்ன வட்டார இலக்கியம் படைத்துக் கொண்டிருந்தோம். இலக்கியம் என்பது மூன்று வகைப்படுகிறது. சமகால இலக்கியம், பிராந்திய இலக்கியம், உலகப் பொது இலக்கியம், இனி யுனிவர்சல் லிட்ரேச்சரை நோக்கி தமிழை நகர்த்த வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அதற்கான களத்தில் இப்போது நான் நிற்கிறேன்.
பாடல்கள் இல்லாத படங்கள் வேம்டும் என்றும் பாடல்கள் படத்திற்கு சுமை என்றும் கமல்ஹாசன் போன்றோர் சொல்லி வருகிறார்களே? அதுபற்றி?
அந்தக் கருத்து முக்கியமான கருத்து. எல்லா கதைகளுக்கும் பாடல்களைத் திணிப்பது நியாயமில்லை. ஆனால் பாடல்கள் தேவைப்படுகிற கதைகளுக்கு பாடல்களை தவிர்ப்பதும் நியாயமில்லை. நாம் பாடல்களை மரபுவழியாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியல்ல. சில படங்கள் பாடல்கள் வேண்டும் என்று கதறும். சில கதைகள் பாடல்களைத் திணிக்காதே என்று கெஞ்சும். நாம் கதறவும் விடக்கூடாது. கெஞ்சவும் விடக்கூடாது.
தீக்குச்சி உசரம் சிறுசுதான்... அந்த தேக்குமரக்காடு பெருசுதான் போன்ற உவமைகளை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?
வாழ்க்கையிலிருந்துதான். மனசிலிருந்துதான் சிந்தித்துக்கொண்டே இருக்கிற பழக்கத்தில் இருந்துதான்.
கள்ளிக்காடு இதிகாசம் நாவல் ஏன் இன்னும் படமாக்கப்படவில்லை?
நல்ல கேள்வி. ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் ஒரு படம் இருக்கிறது. அது வேறு வேறு படம். ஓர் இயக்குநர் ஒரு படத்தை எடுத்துவிட்டால் அந்த வட்டத்துக்குள் மட்டும்தான் அந்தக் காட்சி படிமம் திகழும். ஆனால் படிக்கிற வாசகன் ஒவ்வொருவனுக்கும் ஒரு காட்சிப் பிம்பம் இருக்கிறது. இருக்கும் வரைக்கும் அது அப்படியே இருக்கட்டும்.
உங்கள் படைப்பூக்கத்தை உயிர்ப்பித்துக்கொள்ள நீங்கள் நாடும் நூல்கள், ஆளுமைகள் யார்?
நூல்கள் என்று குறிப்பிட்டத் துறையை மட்டும் கற்றுக்கொண்டிருப்பது சுகமளிக்காது. நேரத்திற்கு ஏற்றவாறு வாசிக்கிறேன். மனநிலைக்கு ஏற்றவாறு வாசிக்கிறேன். பல்துறை நூல்களையும் நாடுகிறேன். இப்பொழுதெல்லாம் பொழுதைப் போக்குவத்குப் படிக்கவில்லை. பொழுதை ஆக்குவதற்குப் படிக்கிறேன்.
புதிய தலைமுறைப் பாடலாசிரியர்கள் முகிழ்த்திருக்கும் நிலையில், அவர்கள் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?
நல்ல திறமையாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். திரையுலகம் என்பது எப்போதுமே தன் சமகாலத்தில் இருபது பேரையாவது வேலை வாங்கும், எல்லா காலகட்டத்திலும், பாபநாசன் சிவன் காலத்திலிருந்து இன்றைக்கு இருக்கிற வைரமுத்து காலகட்டம் வரைக்கும் எல்லா காலங்களிலும் இருபது முப்பது பேர் திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதில் ஒருவன் நடத்திச்செல்வான். மற்றவர்கள் ஓடி வருவார்கள். நடத்திச் செல்கிறவனைத் தாண்டி «£டி வருகிறவன் ª£ரு புதிய பாணியை உருவாக்கி விட்டால், அவன் ஒரு குறிப்பிட்ட தலைமுறைக்குத் தலைமைதாங்குவான். இப்போது வருகிற பாடலாசிரியர்கள் நல்ல திறமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களது திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதைகள் இன்னும் கிட்டவில்லையே என்று என்னைப் போன்றவர்கள் ஆதங்கப்படுகிறோம்.
இளையராஜாவை விட்டுப் பிரிந்து மற்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில்தான் ரஹ்மான் அறிமுகம். அந்தச் சூழல் எப்படி இருந்தது?
ஏ.£ர். ரஹ்மானை அறிமுகமானபோது முதல் பாட்டிலேயே ஒரு புதிய தலைமுறைக்குத் தலைமை தாங்குகிறவன் வந்துவிட்டான் என்ற நம்பிக்கையை நான் பெற்றேன். அது வெறும் அவமானத்தால் வந்ததல்ல. அவருடைய அதீத திறமையால் வந்தது. ரஹ்மான் போன்ற ஒருவரின் வருகைக்காக நான் ஏழு ஆண்டுகள் காத்திருந்தேன். என் காத்திருப்பு வீண்போகவில்லை.
தமிழிடமிருந்து நீங்கள் கற்றதும் பெற்றதும் என்ன? தமிழுக்கு நீங்கள் அளித்தது என்ன?
தமிழ்தான் எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழுக்கு நான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம் அதீதமான வார்த்தைகளாக ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன். வாழ்க்கை சொல்லிக்கொடுக்கிறது. மொழி பதிவு செய்யும் ஊடகமாக இருக்கிறது. வாழ்க்கை சொல்லிக் கொடுத்ததை வாங்கிவைத்துக் கொள்ளக்கூடிய மொழிக்கு நன்றி சொல்கிறேன். வாழ்க்கை கற்றுக்கொடுக்கிறது. நான் எழுதுவதை தமிழ் பெற்றுக்கொள்கிறது.
தமிழ்மொழியின் சிறப்பாக சங்க இலக்கியத்தைச் சுட்டிக் காட்டுகிறோம். பிரெஞ்சு மொழியின் வளர்ச்சிக்கு அதன் நவீன மொழியும் ஒரு காரணம். நவீன தமிழின் சிறப்பாக எதைச் சொல்வீர்கள்?
நவீன தமிழின் சிறப்பு எதையும் உள்வாங்கிக் கொள்ளக்கூடிய அதன் பெருந்தன்மை. இன்னொன்று எதையும் செரித்துக்கொள்ளக்கூடிய அதனுடைய பாரம்பரியமிக்க வயிறு.
இது ஒரு வெட்டியான பேட்டி,இவரு சந்துல
ReplyDeleteசிந்து பாடுவதிலே பலே கில்லாடி