Monday, January 17, 2011
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு விருது
இசைஞானி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியனுக்கு பாலசரஸ்வதி விருது அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2007-2008ஆம் ஆண்டிற்கான சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது தமிழக சட்டசபையில் 7.5.2009 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோல, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் விருதுகள் வழங்கப்படுமெனத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் முகமாகத்தான், இயல் துறையில் சிறந்து விளக்கும் ஒருவருக்கு பாரதி விருது, இசைத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, நாட்டியக் கலையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாலசரசுவதி விருது என மூன்று விருதுகளை ஆண்டு தோறும் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.
அந்த ஆணையின்படி முதல் முறையாக இந்த ஆண்டில், இயல்துறையில் சிறந்த எழுத்தாளராகிய த.ஜெயகாந்தன் அவர்களுக்கு பாரதி விருது வழங்கிடவும், திரை இசைக் கலையில் தனி முத்திரை பதித்துள்ள இளையராஜா அவர்களுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கிடவும்,
நாட்டியக் கலையில் புகழுடன் திகழும் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு பாலசரசுவதி விருது வழங்கிடவும், இந்த விருதுகளைப் பெறும் பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் விருதுக்குரிய பொற்கிழியாக வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment