Friday, January 14, 2011
கலைஞரின் 'இளைஞன்' பட தயாரிப்பாளர் மீது வழக்கு
லாட்டரி அதிபரும், இளைஞன் படத் தயாரிப்பாளருமான மார்ட்டின் மீது வழக்குப் பதிவு செய்ய சேலம் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த வி.ஜி.பாலாஜி என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்திருந்தார். அதில்,
சேலம் நகரத்தில் 2-வது அக்ரஹாரத்தில் 42-வது எண்ணில் உள்ள சொத்து எனக்கு சொந்தமானது. நான், 1990-03 ஆண்டுகளில் லாட்டரி வர்த்தகம் செய்து வந்தேன். மார்ட்டின் லாட்டரி ஏஜென்சியில் லாட்டரி சீட்டுகளை வாங்குவேன்.
மொத்த லாட்டரி விற்பனை தொழில் நடவடிக்கைகளுக்காக என்னிடம் சொத்து பிணைய ஆவணத்தை மார்ட்டின் கேட்டார். அவர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக நானும், லாட்டரி தொழிலில் இருந்த எனது சகோதரர் பிரகாசும் மேற்கண்ட சொத்திற்கான அதிகாரப் பத்திரத்தை 13.11.2000 அன்று அளித்தோம்.
மேலும் நானும், பிரகாசின் மனைவி ஸ்ரீவித்யாவும் மார்ட்டினுடைய மைத்துனர் பெஞ்சமின் பெயருக்கு 23.8.02 அன்று அந்த சொத்துக்கான அதிகாரத்தை அளித்தோம்.
இந்த நிலையில் தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை செய்யப்பட்டது. எனவே எங்கள் லாட்டரி தொழிலை கர்நாடகாவுக்கு மாற்றினோம். லாட்டரி தொழிலில் பாக்கியிருந்த தொகைகளை செலுத்திவிட்டு, அதிகார பத்திரங்களை திருப்பித் தரும்படி மார்ட்டினிடம் கேட்டோம். ஆனால் அவர் அதை தரவில்லை.
இந்த நிலையில் மேற்கண்ட சொத்தில் உள்ள `யுனிவர்சல் மொபைல்' ஸ்டோர்ஸ் கடைக்குள் 13.10.10 அன்று 50 பேர் நுழைந்தனர். அங்கிருந்த அனைவரையும் வெளியேறும்படி மிரட்டினர். கடை படிகளை இடித்து பிளாஸ்டிக் பந்தலை அமைத்தனர். தொடர்ந்து மிரட்டியதால் 16.10.10 அன்று அந்த சொத்தை காலி செய்தோம்.
பின்னர் விசாரித்து பார்த்ததில் மார்ட்டின், பெஞ்சமின் மற்றும் மாணிக்கம் ஆகியோர் மோசடியாக அந்த சொத்தை ரூ.49 லட்சத்து 39 ஆயிரத்துக்கு 18.2.09 அன்று விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து சேலம் போலீஸ் கமிஷனரிடம் 1.11.10 அன்று புகார் கொடுத்தேன். சொத்தை மீட்பதற்காக சேலம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தேன்.
இந்த நிலையில் அந்த கடையை மார்ட்டின் அனுப்பிய ஆட்கள் இடிக்கத் தொடங்கினர். அதை நான் தடுத்தேன். அப்போது என்னை கொடூர ஆயுதங்களால் தாக்க முற்பட்டனர். இதுபற்றி சேலம் நகர போலீஸ் நிலையத்தில் எனது மனைவி புகார் கொடுத்தார். நடவடிக்கை எதுவும் எடுக்காததால் 24.11.10 அன்று டி.ஜி.பி.யிடமும் நான் புகார் செய்தேன்.
இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி கதை வசனத்தில் உருவாகும் `இளைஞன்' என்ற படத்தை மார்ட்டின் தயாரித்துள்ளார். முதல்வர் கருணாநிதியுடன் விழா மேடையில் மார்ட்டின் பங்கேற்றிருக்கிறார். எனவே அரசியல் பின்னணி இருப்பதால் மார்ட்டினை விசாரிக்க சேலம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தயங்குகிறார். 24.11.10 அன்று நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் பாலாஜி.
இந்த மனு நீதிபதி அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் இந்த உத்தரவின் நகலோடு புதிய புகாரை சேலம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மனுதாரர் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் விசாரித்து, குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஹய்யோ....ஹய்யோ....
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment