Monday, January 10, 2011
தடம்புரண்டார் சீமான் அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் வெற்றிக்கான காய்களை படு வேகமாக நகர்த்தத் தொடங்கியுள்ளார். அதில் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை தன் பக்கம் இழுத்துள்ளார் -வைகோவின் மூலமாக.
ஈழத்தில் போர் முடிவடைந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் களத்தில் குதித்தவர் சீமான். முதலில் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி ஈழத் தமிழர் ஆதரவு பிரசாரத்தை வேகமாக முன்னெடுத்தார். அவரது அனல் வேகப் பேச்சால் பலரையும் ஈர்த்தார். இதன் விளைவாக 2 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையும் சென்றார். சமீபத்தில் அவர் விடுதலையானார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை தன் பக்கம் இழுத்துள்ளது அதிமுக. சீமானை அதிமுக கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சிகளை வைகோவிடம் ஒப்படைத்தார் ஜெயலலிதா.
இதன் விளைவாக இன்று வைகோவை சந்தித்துப் பேசினார் சீமான். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,
வருகின்றன சட்டசபைத் தேர்தலில் அதிமுக.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுவதால் காங்கிரசை தோற்கடிப்பதே எனது லட்சியம்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுமாறு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் சீமான்.
சீமானின் பேட்டியின் மூலம் இன்னொரு விஷயமும் தெளிவாகியுள்ளது. அது - அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் சேரவில்லை என்பது.
தற்போதைய சூழ்நிலையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை ஒரு கூட்டணியாகவும், அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் ஆகியவை ஒரு கூட்டணியாகவும் போட்டியிடும் என்று தெரிகிறது. பாமக, திமுக பக்கம் போகலாம். அதேசமயம், தேமுதிகவின் நிலை தெளிவாகத் தெரியவில்லை. பாஜக, குட்டிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு வழக்கம் போல தேறாத ஒரு கூட்டணியை அமைக்கக் கூடும் என்று தெரிகிறது.
கருணாநிதிக்கு எதிராக அதிமுக ஆதரவுடன் சீமான் போட்டி?
அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக சீமான் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் ஒரு வாக்கைக் கூட வீணடிக்காமல் அள்ளி விட படு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.
கிறிஸ்தவர்களை ஐஸ் வைக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார்.
நேற்று நாடார் சமுதாயத்தினரைக் கவரும் வகையில், அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்குச் சென்று பேசினார்.
இப்போது ஈழத் தமிழ் ஆதரவாளர்களின் வாக்குகளை அள்ள அவர் சீமானை வளைத்துள்ளதாக தெரிகிறது.
ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது கடைசிக்கட்டத்தில்தான் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்தார் ஜெயலலிதா. அதேசமயம், லோக்சபா தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே ஈழத்தைப் பற்றிப் பேசுவது கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவருக்காக சீமான் ஆதரவு கோரி பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment