நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று காலை 10.55 மணிக்கு வந்தார். 1 1/2 மணி நேரம் அவர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது வைகோ கூறியதாவது:-
தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன் படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது.
சீமான் பேசிய அதே பேச்சை நான் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களில் பேசினேன். அவர் பேச்சில் எந்த தவறும் இல்லை. வேலூர் சிறையில் நானும், நெடுமாறனும் சீமானை சந்தித்தோம். அப்போது எந்த தவறும் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு கொலைக்காக 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் தம்பிகளையும் பார்த்தேன். சீமானை கைது செய்தது சட்டவிரோதம் என்று கோர்ட்டு விடுவித்துள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததற்கு 1200 கோடி ரூபாய் செலவு செய்தும் கூட 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற சட்டசபை தேர்தல் தமிழர்களின் தன்மானத்திற்கு விடும் அறை கூவல். தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சுதந்திரமாக தொழில் செய்ய பாதுகாப்பு இல்லை. வரப்போகும் தேர்தலில் விலைவாசி உயர்வு, மணல் திருட்டு, வாழ்வாதார சீரழிவு, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி தெருத் தெருவாக பிரசாரம் செய்வோம்.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் காங்கிரசுக்கும் தொடர்பு இருப்பதால்தான் இரண்டு வருடமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மத்திய மந்திரி கபில்சிபல் எதுவுமே நடக்கவில்லை என்கிறார். அப்படியென்றால் ராசாவை ஏன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் களத்தை சந்திக்க வலுவான வஜ்ஜி ராயுதமாக சீமான் இருப்பார். கலையுலகில் இருக்கும் தமிழ் இன உணவாளர்களும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள்.
சீமான் கூறியதாவது:- நான் சிறையில் இருந்த போது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன் அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பணியாற்றுவோம். வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்து விட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவு குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். யோசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். யோசிப்பதற்கு எதுவும் இல்லை. இந்த முறை எப்படியாவது அவர் எம்.எல்.ஏ. தொகுதியில் போட்டியிட வேண்டும்.
கேள்வி:- ஜெயலலிதாவை சந்திப்பீர்களா?
பதில்:- எங்களுடைய சந்திப்பு அண்ணன்-தம்பி சந்திப்பு. அரசியலுக்கு அப்பாற்பட்டது.
கேள்வி:- கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக ஓட்டு போடச் சொன்னீர்கள். இந்த தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா?
பதில்:- இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரசுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரசை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு தைரியும் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி.
கேள்வி:- கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறினீர்களே? போட்டியிட்டு உங்களால் வெற்றி பெற முடியுமா?
பதில்:- காமராஜரை சீனிவாசன் தோற்கடிக்க வில்லையா? அதே போல் சீமானால் தோற்கடிக்க முடியாதா? அது வரலாற்றில் தவறு. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சீமான் உங்களை வற்புறுத்தியுள்ளாரே என்று வைகோவிடம் கேட்டபோது கட்சிதான் முடிவு செய்யும் என்றார்.
யாருமே உண்மையான தமிழனா இல்லையா? எல்லாவருமே வேஷம் தான் போடுவாங்களா? 'பிரபாகரன் என் அண்ணன்' என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லும் சீமானே! 'பிரபாகரனை கைது பண்ணி இந்தியா கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும்' என்று சொன்ன ஜெயலலிதாவோடு சேர போறீங்களா? சீமான் அவர்களே நீங்களுமா.......................!
No comments:
Post a Comment