ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளாகி, பதவியை இழந்த தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவைத் தொடர்ந்து, இன்னொரு அமைச்சரும் சிக்கலில் சிக்கியுள்ளார். இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் பரிந்துரைகளை மீறி, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன், 170 ஆயுர் வேத கல்லூரிகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிற்கல்வி கல்லூரிகள் துவங்கி நடத்துவது என்பது தற்போது இந்தியாவில், லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. ஏற்கனவே, உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்யாத மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக, இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இந்நிலையில், உச்ச நீதிமன்ற கருத்துக்களை மீறியும், இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் அளித்த பரிந்துரைகளை கண்டு கொள்ளாமலும், 170 ஆயுர் வேத கல்லூரிகள், மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்திக் கொள்ள அனுமதியளித்து, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் காந்திசெல்வன் உத்தரவிட்டுள்ளார். இது சம்பந்தமான உத்தரவு, கடந்த ஜூலை 15ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத 170 ஆயுர் வேத கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மாற்றி, அவற்றில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதியளித்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், "ஒரு மருத்துவக் கல்லூரியில் ஒரு நாளைக்கு குறைந்தது 40 உள் நோயாளிகள் இருந்தாலும், ஒரு நாளைக்கு 100 புறநோயாளிகள் வருகை இருந்தாலும், 80 சதவீத ஆசிரியர்கள் இருந்தாலும், கடந்த 2009 - 10ம் கல்வியாண்டைப் போல, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி வழங்கலாம்' எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், மருத்துவக் கவுன்சில் சர்ச்சை குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்கில், இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் தரப்பில், "நூறு சதவீதம் உள் நோயாளிகள் வருகையும், நூறு சதவீதம் வெளி நோயாளிகள் வருகையும், நூறு சதவீதம் ஆசிரியர் வசதியும் இருந்தால் மட்டுமே அக்கல்லூரிக்கு ஒப்புதல் வழங்க முடியும்' எனத் தெரிவிக்கப்பட்டது.இது சம்பந்தமாக, கடந்த ஆண்டு மே 31ம் தேதி, மத்திய சுகாதாரத் துறைக்கு, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் கடிதம் அனுப்பியது. அதில், "மத்திய கவுன்சிலின் விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, பாராட்டு தெரிவித்துள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், மத்திய கவுன்சில் விதிமுறைகளைத் திரித்து, 80 சதவீத ஆசிரியர்கள் வசதி இருந்தால் போதுமானது எனக் கூறியுள்ளார் அமைச்சர்.மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தனது உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ள இணை அமைச்சர் காந்திசெல்வன், "சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் தினேஷ் படேல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையிலும், தேசிய ஆயுர் வேத மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் கூட்டமைப்பு சார்பில், அனுப்பப்பட்ட மனுக்களின் அடிப்படையிலும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது' எனக் கூறியுள்ளார்.
மத்திய இணையமைச்சர் காந்திச்செல்வன் கூறியதாவது: விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை. மேலும், இது கேபினட் அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக கேபினட் அமைச்சர் மூலம் முழு விளக்கம் அளிக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment