Thursday, January 13, 2011
ராக்கெட் ராஜா விவகாரம்-சிறுத்தை படத் தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ்
சிறுத்தை படத்தில் நாடார் மக்கள் சக்திக் கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதை எதிர்த்து சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இக்கட்சியின் சென்னை மாவட்ட செயலாளர் ஸ்டீபன் என்பவர் 3வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
எங்களது கட்சி தலைவர் ராக்கெட் ராஜா நாடார் இன மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். அவருக்கு தென் மாவட்ட மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சிறுத்தை என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்துள்ளார். இதில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். சிவா இயக்கி உள்ளார். இப்படம் பொங்கல் முதல் உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.
இதில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். போலீஸ் டி.எஸ்.பி. ஆக நடிக்கும் கேரக்டரில் ரத்தினவேல் பாண்டியன் என்ற பெயரிலும், பிக்பாக்கெட் திருடன் கேரக்டரில் ராக்கெட் ராஜா பெயரிலும் நடித்துள்ளார். இது எங்களது கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை களங்கப்படுத்துவதுபோல் உள்ளது. சிறுத்தை படம் வெளியானால் தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
பிக்பாக்கெட் திருடன் கேரக்டருக்கு ராக்கெட் ராஜா பெயரை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களது கட்சியினர் கார்த்தி வீட்டுக்கு சென்று போராட்டம் நடத்தினோம். எங்களது கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இப்படத்தால் எங்கள் தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படும்.
எனவே சிறுத்தை படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சல்ம், வருகிற 18ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சிவா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment