மதிமுகவிலிருந்து விலகியுள்ள லேட்டஸ்ட் திரையுலக பிரமுகர் வரிசையில் சேர்ந்துள்ளார் இயக்குநர்-நடிகர் ஆர்.சுந்தர்ராஜன்.
கோவையைச் சேர்ந்தவரான சுந்தர்ராஜன் பயணங்கள் முடிவதில்லை, கீதாஞ்சலி, ராஜாதிராஜா, அம்மன் கோவில் கிழக்காலே, என் ஜீவன் பாடுது, நான் பாடும் பாடல், மெல்லத் திறந்தது கதவு, குங்குமச் சிமிழ், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார். ஏராளமான படங்களில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.
இவர் மதிமுகவில் அரசியல் ஆய்வுக் குழு உறுப்பினராக இருந்து வந்தார். இந்த நிலையில் அப்பதவியிலிருந்து தன்னை அவர் விடுவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சுந்தர்ராஜன் எழுதியுள்ள கடிதத்தில்,
அரசியலில் நேர்மை பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, என்ற உயர்வான உங்கள் முழக்கங்கள் எனக்குப் பிடித்ததால், எந்த ஒரு இயக்கத்தையும் சாராமல் இருந்த நான் ம.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தேன். ம.தி.மு.க. ஆரம்பித்த போது மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். ஆனா என்னோட முதல் தலைவனா உங்களை ஏத்துக்கிட்டு கன்னிப் பொண்ணா வந்தவன் நான்.
வெற்றியோ, தோல்வியோ, இயக்கமும், தலைவனும்தான் முக்கியம் என்று இத்தனை காலமும் வலிகளையும், வேதனைகளையும் தாங்கி, தாங்கி தழும்பேறி போன நான் வெளியே போறது தான் நல்லதுன்னு நீங்க நெனைக்கிறீங்க. உங்களுக்கு நல்லதே பண்ண வேண்டும் என்று நினைக்கிற நான், உங்க நினைப்புப்படியே இப்ப கட்சியோட அரசியல் ஆய்வு மையக்குழுவில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் கலைப்புலி தாணு மதிமுகவிலிருந்து விலகினார். இந்த நிலையில் தற்போது ஆர்.சுந்தர்ராஜன் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment