தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய ஆட்சி மே 13-ந்தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். எனவே 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டு விட்டது. சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான இடங்கள் பற்றிய பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையர் குரோஷியிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதன்படி 234 தொகுதிகளிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தேர்தலை நேர்மையாக நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப்போட பணம் கொடுப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. சமீபத்தில் பீகாரில் தேர்தலின்போது கடைபிடித்த நடைமுறைகளை தமிழக தேர்தலிலும் அமுல்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, வேட்பாளர் செலவு செய்யும் பணத்தை தனியாக வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலமாகவே கொடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வருமான வரித்துறையும் தேர்தல் செலவை கண்காணிக்கும். தேர்தல் நடைபெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடைமுறை அமுலுக்கு வந்து விடும். மே மாதம் தேர்தல் நடைபெற வேண்டும். எனவே, பிப்ரவரி மாதம் கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment