நடிகர் விஜயகுமார் வீட்டில் கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி நடிகை வனிதாவின் 2-வது கணவர் ஆனந்தராஜனுக்கும், விஜயகுமாருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசில் வனிதா புகார் செய்தார். விஜயகுமார் தரப்பிலிருந்தும் புகார் செய்யப்பட்டது. இதில் விஜயகுமார் தரப்பு புகார் மீது மட்டும் போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை நடிகை வனிதா தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீ ஹரியை (வயது 9) தன்னிடம் இருந்து ஆகாஷ் கடத்தி சென்றுவிட்டதாகவும், சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்தனர். ஜனவரி 5-ந் தேதிக்குள் சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர்.
காலக்கெடு 2 நாட்களே உள்ள நிலையில், சிறுவன் விஜய் ஸ்ரீ ஹரியை சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்க வைத்தனர். அந்த செய்தியை படிக்க இங்கு செல்லவும்
இந்நிலையில் நடிகை வனிதா, அவரது 2-வது கணவர் ஆனந்தராஜ் ஆகியோர் மீது முன்னாள் கணவர் ஆகாஷ் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
நடிகை வனிதா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் மகன், விஜய்ஸ்ரீஹரியை அவரிடத்தில் 2 வாரத்தில் ஒப்படைக்கும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உத்தரவு பிறப்பித்த 3-வது நாளிலேயே விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவரது தந்தை விஜயகுமாரிடம் சென்னை விமான நிலையத்தில் தகராறு செய்துள்ளார்.
வனிதா-ஆனந்தராஜின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே இந்த இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ஆகாஷ் கூறியுள்ளார்.
மேலும் விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்கும் காலஅவகாசத்தை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிப்பு செய்ய கேட்டு ஆகாஷ் மற்றொரு மனுவையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த 2 மனுக்களும் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment