Thursday, January 6, 2011
மன்மதன் அம்பு டூ மங்காத்தா! - த்ரிஷா!
தமிழ் சினிமாவில் தடதடவென உயர்ந்து, சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம் பெற்றிருப்பவர். தற்போது கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் "மன்மதன் அம்பு' படமும் அவரை மேலுமோர் சிகரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது. இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருப்பதால் சந்தோஷத்தில் பூத்திருந்த த்ரிஷா அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது
கமலிடம் நீங்கள் பார்த்து வியந்த விஷயம் என்ன?
கமல் ஸாருக்கு உலக விஷயங்கள் அனைத்தும் தெரியும். எதைப் பற்றிக் கேட்டாலும் அதற்கான சரியான பதிலை உடனே சொல்வார். சின்ன சந்தேகம் கேட்டால் கூட அதைப் பற்றிய விரிவான தகவலை எடுத்துச் சொல்வார். ஒரு நாட்டை சுற்றிப் பார்க்கும்போது அந்த நாட்டைப் பற்றிய தகவல்கள், சிறப்பம்சங்கள், வரலாறு உள்ளிட்ட பல அம்சங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். "இவ்வளவு தகவல்களை தனது மூளையில் சேமித்து வைத்திருக்கிறாரே' என்று நான் பலமுறை வியந்திருக்கிறேன். கமல் ஸார் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்தான்!
எந்த நாட்டைப் பற்றி கேட்டாலும் இங்கே, இந்தந்த வருடங்களில் இதுவெல்லாம் நடந்தது; அந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான அரசியல் நிலவரம் என்ன? அந்த நாட்டில் முன்பு ஆட்சி செய்த மன்னர்கள் யார்? அவர்களைப் பற்றிய சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களைப் பொழிவார். என்னைப் பொருத்தவரை சினிமாவில் கதாநாயகியாக நடிப்பவர்கள் ஒரு படத்திலாவது கமல் ஸாரோடு இணைந்து பணிபுரிய வேண்டும். அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
சென்ற வருடம் எப்படியிருந்தது? இந்தப் புத்தாண்டு எப்படியிருக்கிறது?
கடந்த வருடம் எனக்குச் சிறப்பான ஆண்டாகத்தான் இருந்தது. ஹிந்தியில் நான் நடித்த "கட்டா மிட்டா' படம் வெளியானது. அந்தப் படம் பெரிய அளவில் பேசப்படவில்லையென்றாலும் அது இயக்குநர் ப்ரியதர்ஷன் ஸாருக்காக நான் நடித்த படம். அடுத்து, தமிழில் "விண்ணைத் தாண்டி வருவாயா' படம் எனக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
அந்தப் படத்தில் நான் ஏற்று நடித்திருந்த ஜெஸ்ஸி வேடம் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இயக்குநர் கெüதம் மேனன் ஸார் அந்தப் பாத்திரத்துக்கு கிளாமர் எல்லாம் கொடுக்காமல், நடிப்பாற்றலைக் கொடுத்து அந்தப் பாத்திரத்தைப் பிரபலப்படுத்திவிட்டார். அந்தப் படத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக அமைந்தது.
ஜெஸ்ஸி பாத்திரத்துக்குப் பிறகு, அதே மாதிரியான கேரக்டர் மறுபடியும் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்தேன். "மன்மதன் அம்பு' எனது ஏக்கத்தை நிறைவேற்றி வைத்துவிட்டது. "அம்புஜாக்ஷி' என்கிற வித்தியாசமான பாத்திரத்தை கே.எஸ்.ரவிக்குமார் ஸார் அமைத்திருந்தார். ஜெஸ்ஸி பாத்திரத்தைப் போன்ற மாறுபட்ட பாத்திரம்தான் இதுவும். ரசிகர்கள் இந்தப் பாத்திரத்தையும் ஏற்றுக்கொண்டது சந்தோஷமாக இருக்கிறது.
தற்போது வேறு எந்தெந்தப் படங்களில் நடிக்கிறீர்கள்?
"மன்மதன்' அம்பு படத்திற்குப் பிறகு தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் "மங்காத்தா' படத்தில் நடிக்கிறேன். இது எனக்கு அஜீத் ஸாருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் மூன்றாவது படம். இது மல்ட்டி ஸ்டார் படம் என்பதால் இதில் எனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு நிறையவே அமைந்துள்ளது. இந்தப் படமும் ரசிகர்களிடையே எனக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஹிந்தியில் வெளியான "லவ் ஆஜி கல்' படத்தை தெலுங்கில் ரீ-மேக் பண்றாங்க. அதில் பவன் கல்யாணுடன் நடிக்கிறேன். இப்போது இருக்கிற இளைஞர்களுக்கு இந்தப் படம் ரொம்பப் பிடிக்கும். வித்தியாசமான கதை இது. காதலில் விழும் இருவர் "காதல் நமக்கு சரிப்பட்டு வராது' என்று நினைத்துப் பிரிஞ்சுடுவாங்க. பிறகு, முதல் காதலோட ஆழமும், அர்த்தமும் புரியும்.
அப்படியொரு அழுத்தமான ஸ்டோரி இது. கண்டிப்பாக ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இதைத் தொடர்ந்து தெலுங்கில் "சாவித்திரி' என்கிற படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது மிகவும் அருமையாக இருந்தது. இந்தப் புத்தாண்டில் எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால் ரசிகர்கள் எல்லோரும் ""இந்தப் பொண்ணு நல்லா நடிக்குதுங்க...'' என்று சொல்வதுதான்!
பாலிவுட் பக்கம் மறுபடியும் போகிற எண்ணமிருக்கிறதா?
ஹிந்தியில் மறுபடியும் நடிக்க வேண்டியிருந்தால் அது பெரிய பட்ஜெட் படமாக இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வேன். தென்னிந்தியாவில் எனக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டாலே போதுமானது. நான் பாலிவுட் பக்கம் போக மாட்டேன் என்பதை ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். நல்ல கதையம்சத்துடன், சுவாரஸ்யமான திரைக்கதையும் அமைந்தால் மட்டுமே அதுபற்றி யோசிப்பேன்! தற்போது ஹிந்தியில் நடிக்கும் எந்தத் திட்டமும் என்னிடமில்லை!
மறுபடியும் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்வீர்களா?
ஹிந்தியில் ஒரு படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கியதால் இங்கே சில படங்களில் நடிக்க முடியாமல் போனது உண்மைதான். ஆனால், இப்போது படங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை எல்லா நடிகர்களுடனும் நடிக்கத்தான் விரும்புகிறேன்.
"சர்வம்' படத்தில் ஆர்யாவுடன் நடித்தேன். "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிம்புவுடன் நடித்தேன். இப்போது கூட சில இளம் நாயகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நல்ல கதை அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் ஜோடி சேர்ந்து நடிப்பேன்.
உடை விஷயங்களில் கலக்குகிறீர்களே! இதற்காக ஸ்பெஷல் கவனம் செலுத்துகிறீர்களா?
சினிமாவில் மட்டுமல்ல; இயல்பு வாழ்க்கையிலும் உடை விஷயத்தில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வேன். என்னுடைய உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகளைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். அதுமட்டுமில்லை, ஒவ்வொரு விதமான ஆடையையும் எந்தெந்தச் சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். அதற்காக நேரம் செலவிடுவேன்!
"மன்மதன் அம்பு' படத்தில் பாடியதுபோல மற்ற படங்களிலும் பாடுவீர்களா?
ஒப்புக்கொள்ளும் படங்களில் நடிக்கவே நேரமில்லாதபோது தொடர்ந்து எப்படிப் பாட முடியும்? உண்மையிலேயே எனக்கு இப்போது நேரமில்லை. ஆனால், சரியான வாய்ப்பு கிடைத்தால் பாடுவேன்!
த்ரிஷா ஃபவுண்டேஷனின் செயல்பாடுகள் எப்படியிருக்கு?
பொதுவாக என்னுடைய ஃபவுண்டேஷன் சத்தமில்லாமல் நிறைய நல்ல வேலைகளைச் செய்துகிட்டு இருக்கு. நான் என்ன செய்கிறேன் என்பதைப் பெரும்பாலும் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. சிலர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்னுடைய புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். என்னைப் பொருத்தவரை நான் செய்கிற உதவிகளைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லிக்கொள்வது கிடையாது.
உங்களுடைய தோழிகள் குறித்து?
என்னுடைய "கேங்க் ஆஃப் ஃப்ரெண்ட்ஸ்' குறித்து எல்லோருக்குமே தெரியும். சின்ன வயதிலிருந்தே ஒரே பள்ளியில் படித்தவர்கள் அவர்கள். நான் இளைப்பாறும் இடமே அவர்கள்தான். வாழ்க்கையின் கடைசி வரைக்கும் என்னுடைய தோழிகளுடன் இருப்பேன். கல்யாணமாகி எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அவர்களோடு தொடர்பில் இருப்பேன். தோழிகளுடன் இருக்கும்போதுதான் நான் நடிகையென்பதே மறந்து போகிறது. தோழிகள்தான் என் பலம்!
எதிர்காலத் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?
திட்டமெல்லாம் ஒன்றுமில்லை. என்னுடைய தொழில் நடிப்பு. அதை நிறைவாகச் செய்தாலே போதுமானது என்று நினைக்கிறேன். தெரிந்த வேலையைச் செய்து வெற்றி பெறவே எண்ணுகிறேன். இந்த ஆண்டு எல்லோருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment