தேர்தல் கூட்டணி தொடர்பாக விஜயகாந்த்துடன் அதிமுக தரப்பில் பேசி வருகிறார்கள். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிலவிய கூட்டணி வரும் சட்டசபை தேர்தலிலும் தொடர்கிறது. புதிய கட்சிகள் வர உள்ளன. விலைவாசி உயர்வை கண்டித்து வரும் பிப்ரவரி 3 முதல் 9 வரையிலும் கூட்டணி கட்சிகளை இணைத்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அந்த போராட்டத்திற்கு விஜயகாந்த் கட்சியான தே.மு.தி.க.,விற்கும் அழைப்பு விடுக்க உள்ளோம்.
அவர் அ.தி.மு.க., கூட்டணியில் இணையவும் அழைப்பு விடுக்க உள்ளோம். அவர் சேலம் மாநாட்டில் அறிவித்தபடி தி.மு.க.,மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவும், தனித்து போட்டியிடாமல் இருக்கவும் அ.தி.மு.க., சார்பில் அவருடன் பேசப்பட்டு வருகிறது. கூட்டணி என்பதற்காக பாரதிய ஜனதா உள்ளிட்ட வேறுகட்சிகளுடன் இணைந்து அவர் போட்டியிடுவதாக இருந்தால் அதனை நாங்கள் தடுக்க இயலாது.
விரைவில் கூட்டணி இறுதி முடிவை எட்டும். கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் எத்தனை சீட்பெறுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை விரைவில் முடிவு செய்வோம். தேர்தலில் அ.தி.மு.க., தனி மெஜாரிட்டியுடன் வெற்றிபெறும்.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் குறித்து எங்களுக்கு நம்பிக்கையில்லை. தற்போது அதுவும் ஒரு வகையில் தேர்தல் பிரசாரமாகிவிட்டது. யாராவது அமைப்புகளுக்கு பணம் கொடுத்து தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என கூறவைக்கிறார்கள். அதை நம்பத் தேவையில்லை என்றார் அவர்.
No comments:
Post a Comment