நாட்டில் இருப்பது நல்லதல்ல, சில காலம் வெளிநாட்டில் இருப்பது நல்லது என்று ஜோசியக்காரர்கள் கூறியதைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே.
சமீபத்தில் இங்கிலாந்து சென்றிருந்தார் ராஜபக்சே. இதுவும் தனிப்பட்ட பயணம்தான். ஆனால் ஹீத்ரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள் காட்டிய ஆவேச எதிர்ப்புப் போராட்டத்தால் நிலை குலைந்து போனார் ராஜபக்சே. தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து கொழும்பு திரும்பி வந்தார்.
இந்த நிலையில் மேலும் ஒரு தனிப்பட்ட பயணமாக ராஜபக்சே நேற்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார். இந்தப் பயணம் ரகசியமகாவும், அவசரம் அவசரமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் ஜோசியக்காரர்களாம். தற்போது நேரம் சரியில்லை, கிரக நிலைகள் பாதகமாக உள்ளன. எனவே சிலகாலம் வெளிநாட்டில் போய் இருப்பது நல்லது என்று ஜோசியக்காரர்கள் கூறியதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குப் போயுள்ளாராம் ராஜபக்சே.
லிபியாவுக்குப் போயுள்ள தனது மகன் நாமல் ராஜபக்சேவையும் அமெரிக்காவுக்கு வருமாறு அவர் அழைத்துள்ளாராம். ராஜபக்சேவுடன் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட ஒரு குழுவும் துணைக்குப் போயுள்ளதாம்.
பொங்கல் பானைக்குள் விழுந்த தலைப்பாகை:
இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் நடந்த பொங்கல் விழாவின்போது ராஜபக்சேவின் தலைப்பாகை பொங்கல் பானைக்குள் விழுந்து விட்டது அபசகுனம் என்றுஅந்த நாட்டு ஜோசியக்காரர்கள் தெரிவித்துள்ளனராம்.
தமிழர்கள் மீது தான் ரொம்பப் பாசமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் நடந்த பொங்கல் விழாவில் ராஜபக்சேவும் கலந்து கொண்டார்.
அப்போது பானைக்குள் அரிசியைப் போடக் குணிந்தபோது ராஜபக்சேவின் தலைப்பாகை தவறி பானைக்குள் விழுந்து விட்டதாம். இது அபசகுனமாக கூறப்படுகிறது. இதுவும் கூட ராஜபக்சே அமெரிக்காவுக்குக் கிளம்பிப் போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
நடிகைக்கு கார் கொடுத்த கோத்தபயா:
இதற்கிடையே சிங்கள நடிகை ஒருவருக்கு புத்தம் புதிய பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபயா. இது இலங்கையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் பரிசாக தூக்கிக் கொடுத்த கார், பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான காராம். இதுதான் சர்ச்சையாகியுள்ளது.
கோத்தபயா, இலங்கை பாதுகாப்புத்துறையின் செயலாளராக இருக்கிறார். இவர், சிங்கள நடிகையான சபீதா பெரேராவுக்கு பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சொந்தமான 5565 என்ற எண் கொண்ட நவீன பென்ஸ் காரை பரிசாக கொடுத்திருக்கிறாராம். இந்த வெள்ளை நிற பென்ஸ் கார் சட்டவிரோதமாக தரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது இலங்கை அரசியலில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இலங்கையில் பாக். ராணுவத் தளபதி:
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி 3 நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். அவரை கொழும்பு விமான நிலையத்தில் இலங்கைத் தளபதி ஜெயசூரியா வரவேற்றார்.
3 நாள் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் கயானியுடன் அவரது மனைவியும், சில அதிகாரிகளும் வந்துள்ளனர். ராஜபக்சே, பிரதமர் ஜெயரத்னே, கோத்தபயா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார் கயானி. ஆனால் அதற்குள் ராஜபக்சே அமெரிக்காவுக்குப் போய் விட்டதால் அவரை மட்டும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். இருப்பினும் கோத்தபயாவுடன், கயானி முக்கியப் பேச்சுக்களை நடத்துவார் என்று தெரிகிறது.
ஈழத்தில் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்த பின்னர் தொடர்ந்து ராணுவ அதிகாரிகளாக அந்த நாட்டுக்கு வந்து போய்க் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து முப்படைகளின் தளபதிகளும் அடுத்தடுத்து இலங்கை சென்றனர். இப்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதி வந்துள்ளார்.
No comments:
Post a Comment