நடிகர் ரஜினிகாந்துக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 13-ந்தேதி உடல் நலக்குறைவால் இங்கு அனுமதிக்கப்பட்டார்.
ரஜினி உடல் நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதித்தனர். அப்போது நுரையீரலில் நீர்கோர்ப்பு இருந்ததை கண்டறிந்தனர். அதை லேசான அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். ஆனாலும் மூச்சு திணறல் இருந்தது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு காலில் வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடலில் தேவைக்கு அதிகமான உப்புநீர் சேர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். டயாலிசிஸ் சிகிச்சையை தொடர்வதா நிறுத்துவதா என்று டாக்டர் குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.
அமெரிக்க டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ரஜினி உடல் நிலையை ஆய்வு செய்கிறார்கள். அவர்களிடம் டயாலிசிஸ் சிகிச்சை பற்றி கருத்து கேட்டு அதன்படி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை இதய சிகிச்சை மைய இயக்குனர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார். மார்பு பகுதியில் உள்ள நீரை எடுப்பதற்காகவே தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் என்றும் விரைவில் தனியறைக்கு மாற்றப்படுவார் என்றும் அவர் கூறினார்.
ரஜினி தற்போது இட்லி வடை சாப்பிடுகிறார். எனவே 2 நாளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்படுவார் என்று ஆஸ்பத்திரி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரஜினிக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சரியான அளவு உள்ளன என்று மருத்துவ செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. டயாலிசிஸ் சிகிக்சை அவருக்கு பயன் அளித்துள்ளது என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் ரஜினி உடல்நிலை குறித்து தொடர்ந்து தவறான வதந்தி கள் பரவி வருகின்றன. திருநெல்வேலியில் கடைகளும் அடைக்கப்பட்டது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரஜினியின் மனைவி லதா, மருமகன் தனுஷ் ஆகியோர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் ரஜினி பூரண குணம் பெற்று திரும்ப வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment