ரஜினிகாந்த் சிகிச்சை பெறும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நிற்கின்றனர். ரஜினி உடல்நிலைப்பற்றி தவிப்போடு விசாரித்து வருகிறார்கள். சிலர் வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே தங்கியுள்ளனர். இரவில் ரோட்டோரம் துண்டை விரித்து படுத்து தூங்குகிறார்கள்.
திடீர்... திடீரென பரவும் தவறான வதந்திகளால் கதறி அழவும் செய்கின்றனர். அவர்களிடம் பேசியபோது வேதனைகளை அள்ளி கொட்டினர். அதன் விவரம் வருமாறு:-
உமாகருப்பசாமி (பல்லாவரம்):- ரஜினி நடிகர் மட்டுமல்ல. குடும்பத் தலைவர். ஏழைகளுக்கு எப்பவும் உதவக் கூடியவர். தமிழர்களுக்காக வாழ்கிறவர். அவர் பல்லாண்டு வாழனும், ஆஸ்பத்திரியில் அனுமதித்த நாளில் இருந்து மன அமைதியின்றி தவிக்கிறோம். பூரண குணமடைய கடவுள்கிட்ட வேண்டுகிறோம்.
கண்ணன் (திருச்சி):- எங்கள் தலைவர் ரஜினி விளம்பரம் இன்றி நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறார். அவரால் திரையுலகில் பயன் பெற்றோர் ஏராளம். அவர் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறோம். உடல் நிலை பற்றி வதந்திகள் பரவுகின்றன. அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க ரஜினி சிகிச்சை வீடியோவையும் போட்டோவையும் வெளியிட வேண்டும்.
சிம்பிள் சுந்தர் (ஐயப்பன்தாங்கல்):- தலைவர் எந்திரனில் ஸ்டெய்ன் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அப்படம் ரிலீசானதும் நீண்ட ஓய்வு எடுத்து விட்டுத்தான் புதுப்படத்தில் நடிப்பேன் என்றார். ஆனால் ஓய்வு எடுத்ததாக தெரியவில்லை. ”ராணா” படப்பிடிப்புக்கு வந்து விட்டார். இதனால் சோர்வு ஏற்பட்டது. சிகிச்சை முடிந்து திரும்பியதும் போதிய ஓய்வு எடுத்து அதன் பிறகே “ராணா”வை தொடர வேண்டும். அவர் நலனே தமிழ் சினிமாவின் நலன்.
ரசிகர்கள் சிலர் தலைவர் ரஜினி சிகிச்சை பற்றிய வீடியோ, போட்டோவை கேட்டு வருகின்றனர். உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் சிகிச்சை கொடுத்து ஓய்வெடுக்க சொல்வீர்களா? போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்வீர்களா? ரசிகர்கள் அன்பை அவரின் குடும்பத்தினர் அறிந்தே வைத்துள்ளனர். எதை எப்போது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்.
ரஜினி இப்ராஹிம் (விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற தலைவர்):- ஏழையாய் பிறந்து உழைப்பால் உயர்ந்து எளிமையாய் வாழும் தலைவர் ரஜினி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது எங்களை துயரப்படுத்தி உள்ளது. எங்கள் எண்ணங்கள் அவரை சுற்றியே சுழல்கின்றன. தலைவர் சிகிச்சை புகைப்படத்தை ரசிகர்கள் கேட்பது தவறு. “ராணா” எங்களுக்கு முக்கியமல்ல. அவர் நலம் பெற்று வீடு திரும்புவதே முக்கியம்.
ரவி (போரூர்):- ரஜினி நல்ல மனிதர். கோடானு கோடி ரசிகர்கள் இதயங்களில் இடம் பெற்றவர். அவருக்கு உடல் நலக்குறைவு என்றதும் நிம்மதி இல்லை. வேலைக்கு போகாமல் ஆஸ்பத்திரி முன் காத்து நிற்கிறேன். நலம் பெற்று வீடு திரும்பி மீண்டும் “ராணா” படத்தில் நடிக்க வேண்டும்.
நெப்போலியன் (பெங்களூர்):- ரஜினி இயல்பாகவே சுறுசுறுப்பானவர். யோகா, தியானம் என உடம்பை கட்டுக்குள் வைத்திருப்பவர். தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறைகளின் ஒரே சூப்பர் ஸ்டார் இவர்தான். எளிமையான உணவு பழக்க வழக்கங்கள் கொண்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவர் பூரண குணமடைய வேண்டும்.
மாணவர் ரோபோசத்யா (அண்ணாநகர்):- ரஜினி எங்கள் குடும்பத்தில் ஒருவர். ராணாவுக்காக அவர் உடலை குறைத்ததாக செய்தி வருகிறது. அப்படி நடந்திருந்தால் அது தவறு. ரஜினி வயதை சம்பந்தப்பட்ட இயக்குனர் கருத்தில் கொள்ள வேண்டும். அவர் சும்மா வந்து நின்றாலே படம் வெள்ளி விழா போகும்.
ஹரிசிவாஜி (கோடம்பாக்கம்):- ரஜினிக்காக மதங்களை கடந்து ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். சிகிச்சை பற்றி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவது அவரின் தனிப்பட்ட விஷயம். இது சம்பந்தமாக அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment