சென்னை போலீஸ் கமிஷனரிடம் இளம் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து, தனது கணவர் மீது பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், தனது கணவர் இன்டர்நெட் மூலம் இளம் பெண்களோடு காதல் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் மகளிர் விடுதி ஒன்றில் தங்கியிருப்பவர் செந்தில்வடிவு. பட்டதாரி பெண்ணான இவர், நேற்று காலையில் கைக்குழந்தையோடு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அவர் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது சொந்த ஊர் கோவை ஆகும். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஒருவரை கடந்த 2009-ம் ஆண்டு காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்துகொண்டேன். அவருடன் சேர்ந்து வாழ்ந்த குடும்ப வாழ்க்கையின் பலனாக எனக்கு குழந்தையும் பிறந்தது.
குழந்தை பிறந்தபிறகு எனது கணவர் பல பெண்களோடு தொடர்பு வைத்திருப்பவர் என்று எனக்கு தெரிய வந்தது. இன்டர்நெட் மூலம் அவர் ஏராளமான பெண்களிடம் காதல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தார். நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.
3 பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்ய முயற்சித்தார். திருமணம் செய்யவிடாமல் நான் தடுத்து நிறுத்தினேன். அவருடைய காதல் விளையாட்டுகளுக்கு அவரது பெற்றோரும் துணையாக உள்ளனர். இதை தட்டிக்கேட்ட என்னை, எனது கணவர் அடித்து உதைத்து சித்ரவதை செய்கிறார்.
என்னை வீட்டைவிட்டும் விரட்டிவிட்டார். அதனால்தான் நான் இப்போது கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருக்கிறேன். 15 பவுன் நகையுடனும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தோடும் வந்தால்தான் உன்னை மனைவியாக ஏற்றுக்கொள்வேன் என்று எனது கணவர் கூறிவிட்டார்.
இதுதொடர்பாக எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துவிட்டேன். எனது கணவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள். 3 மாதத்தில் என்னோடு சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் உறுதி அளித்தார். ஆனால் அதன்படி என்னோடு சேர்ந்து வாழவில்லை. மீண்டும் அவர் இன்னொரு திருமணம் செய்ய முயற்சிக்கிறார்.
அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். அதோடு அவருடைய காதல் விளையாட்டில் மயங்கி எந்த பெண்ணாவது ஏமாந்துவிடாமலும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு செந்தில்வடிவு தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனுமீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment