தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், புதுக்கோட்டை மாவட்டத்தில், சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் நடந்துள்ள முதல் தேர்தல் என்பதால், முடிவை அறிந்து கொள்வதில், அம்மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். தொகுதி நிலவரம்:
கந்தர்வக்கோட்டை(தனி): அ.தி.மு.க., சார்பில், "சிட்டிங்' எம்.எல்.ஏ., சுப்பிரமணியன் மீண்டும் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க., சார்பில், கவிதைப்பித்தன் களம் இறக்கப்பட்டார். இரு வேட்பாளர்களும் தொகுதிக்கு அப்பாற்பட்டவர்கள் என்றாலும், அ.தி.மு.க.,வின் கோட்டையாக திகழ்ந்த குளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்கள் கந்தர்வக்கோட்டை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இத்தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க., வெற்றி பெற வாய்ப்புள்ளது.
விராலிமலை: மாவட்டத்தில் அதிகபட்சமாக, 85.93 சதவீதம் ஓட்டு பதிவான தொகுதி. இங்கு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் ரகுபதி போட்டியிட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியதால், இருதரப்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டது. அ.தி.மு.க., சார்பில் வழங்கப்பட்ட பணம் முறையாக வாக்காளர்களை சென்றடைந்தது. இதன் காரணமாகவும், தொகுதிக்குட்பட்டவர் என்பதாலும், விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் விஜயபாஸ்கர் தெம்பாக உள்ளார்.
புதுக்கோட்டை: தி.மு.க., சார்பில், பெரியண்ணன் அரசு போட்டியிட்டார். எதிர்த்து அ.தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்துக்குமரன் களம் இறக்கப்பட்டார். தேர்தல் களத்தில் இறுதிக்கட்டம் வரை, இருவேட்பாளர்களும் சமபலத்துடன் இருந்தனர். தி.மு.க., அரசின் ஐந்தாண்டு கால சாதனைகள் மட்டுமே என்னை வெற்றிபெறச் செய்யும் என்ற நம்பிக்கையுடன் பெரியண்ணன் அரசு உள்ளார். வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி நீடிக்கிறது.
திருமயம்: அ.தி.மு.க., சார்பில் வைரமுத்து போட்டியிட்டார். எதிர்த்து காங்கிரஸ் சார்பில், "சிட்டிங்' எம்.எல்.ஏ., சுப்புராம் போட்டியிட்டார். இவர் கடந்த தேர்தலில், அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகளை பெற்று, நூலிழையில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,வின் தோல்விக்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காரணமாக அமைந்ததால், இந்த தேர்தலில் ஆரம்பம் முதலே அ.தி.மு.க.,வுக்கு அனுதாப அலை வீசியது. இவை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் வைரமுத்துவை வெற்றிபெறச் செய்யும் என, அ.தி.மு.க., வினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஆலங்குடி: அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ம.க., சார்பில், அருள்மணி போட்டியிட்டார். இருவருக்கும் போட்டி வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் மகன் ராஜபாண்டியன் சுயேச்சையாக போட்டியிட்டார். இவர் பெறும் ஓட்டுகளை வைத்தே வெற்றி, தோல்வியை தீர்மானிக்க வேண்டியுள்ளது.
சுயேச்சை வேட்பாளர் ராஜபாண்டியன் 15 ஆயிரத்துக்கும் அதிகமாக ஓட்டுகள் பெற்றால், அ.தி.மு.க.,வுக்கு பாதகமாக அமையும். குறைவாக பெற்றால் பா.ம.க., வுக்கு பாதகமாக அமையும். இருந்தாலும், குறைந்தபட்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் கு.ப.கிருஷ்ணன் வெற்றி பெறுவார் என, அ.தி.மு.க.,வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி: இங்கு தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் சார்பில், திருநாவுக்கரசர் போட்டியிட்டார். அ.தி.மு.க., சார்பில் ராஜநாயகம் போட்டியிட்டார். இத்தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் கிடைக்காததால், அதிருப்தியடைந்த தி.மு.க., சிட்டிங் எம்.எல்.ஏ., உதயம் சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தேர்தல் பணிகளை புறக்கணித்ததோடு மட்டுமின்றி, உள்ளடி வேலைகளில் ஈடுபட்டனர். இதனால், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் திருநாவுக்கரசு கரையேறுவார் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

No comments:
Post a Comment