34 வருட காலமாக செங்கோட்டையாக திகழ்ந்த மேற்கு வங்காளத்தை மாபெரும் வெற்றியுடன் கைப்பற்றியுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி இன்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மம்தா.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 184 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 42 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மம்தா பானர்ஜிக்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் உள்ளது. என்றாலும் அவர் மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொண்டு கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கவர்னர் எம்.கே.நாராயணனை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்றுக் கொண்ட கவர்னர் நாராயணன், மம்தாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து 20-ந் தேதி பதவி ஏற்பதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் வீழ்த்தப்பட்டு புதிய ஆட்சி மலர்ந்துள்ளதால் பதவி ஏற்பு விழா கோலாகலமாக நடந்தது.
இதற்காக 208 ஆண்டு பழமையான பாரம்பரியம்மிக்க கவர்னர் மாளிகை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள புல்வெளியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடந்தது.
மதியம் 1.01 மணிக்கு மம்தா பானர்ஜி முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் நாராயணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
மம்தாவைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். 43 பேர் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 36 பேர் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள். 7 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
புதிய மந்திரிகளில் அமித் மித்ரா, பார்தா சட்டர்ஜி, மனீஷ்குப்தா, சுப்ரதா முகர்ஜி, அப்துல் கரீம் சவுத்திரி, சதன் பாண்டே, ரத்யாபாசு, நூல் ஆலம் சவுத்திரி ஆகியோர் முக்கியமானவர்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் பதவி ஏற்றனர். பிறகு அவர்கள் மம்தாவிடம் வாழ்த்து பெற்றனர். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு 3200 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் மேற்கு வங்க மாநில கவர்னர் மாளிகை விழா கோலாகலமாக காட்சி அளித்தது.
மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், முன்னாள் முதல்- மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மம்தா பானர்ஜி அமைச்சரவை பதவியேற்பில் கலந்து கொண்டனர்.
2 ஆட்டோ ரிக்ஷாக்காரர்கள், 2 தெருவாசிகள், 2 குடிசைவாசிகள் மம்தா பதவி ஏற்பதை காண சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். சிங்கூர் போராட்டத்தின் போது கற்பழித்து கொல்லப்பட்ட தபசி மாலிக் குடும்பத்தினரும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியை யாராலும் இறக்க முடியாது என்றிருந்த நிலையை மம்தா நிகழ்த்தி காட்டி உள்ளார். அதோடு அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இது தவிர 19 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சபதத்தை இன்று மம்தா பானர்ஜி நிறைவேற்றி உள்ளார்.
1992-ம் ஆண்டு மம்தா, மத்திய மந்திரியாக இருந்தார். அப்போது ஓடியா எனும் கிராமத்தில் தீபாலி பசக் என்ற பெண்ணை கம்யூனிஸ்ட்டு கட்சியினர் கற்பழித்து அட்டூழியம் செய்தனர். உடனே மம்தா, தீபாலியை அழைத்து கொண்டு சட்டசபை கட்டிடமான ரைட்டர்ஸ் பில்டிங்குக்கு சென்றார்.
அப்போது முதல்- மந்திரியாக இருந்த ஜோதிபாசு அவரை பார்க்க மறுத்துவிட்டார். இதனால் மம்தா பானர்ஜி சுமார் 3 மணி நேரம் சட்ட சபையில் தர்ணா செய்தார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அப்போது மம்தா பானர்ஜி, இனி இந்த சட்டசபைக்குள் முதல்வராகத்தான் வருவேன் என்று சபதம் செய்தார். அவரது சபதம் இன்று நிறைவேறி உள்ளது.

No comments:
Post a Comment