சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு ஆதரவாளர்களும், இளங்கோவன் ஆதரவாளர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலு ராஜினாமா செய்தார். அப்போது சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு ஆதரவாளர்கள் சந்திரன் தலைமையில் கூடி இருந்தனர். தங்கபாலு ராஜினாமா செய்வது பற்றி கேள்விப்பட்டதும் முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆதரவாளர்களான முன்னாள் கவுன்சிலர் மணிப்பால், கோபி, பூக்கடை வேலு ஆகியோர் அங்கு வந்தனர்.
சத்தியமூர்த்தி பவன் போர்டிகோவில் நின்றிருந்த அவர்களை உள்ளே விடாமல் சந்திரன் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. சந்திரனை அவர்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாக தாக்கினார்கள். உடனே தங்கபாலு ஆதரவாளர்கள் சிலர் ஓடி வந்து சந்திரனை மீட்டனர். அவரை தாக்கியவர்களை பதிலுக்கு திருப்பி தாக்கினர். இதனால் இரு தரப்பினரும் பயங்கர அடி தடியில் ஈடுபட்டனர். ஒருவரை யொருவர் அடித்து கீழே தள்ளி மிதித்து உதைத்தனர். சிலர் சத்தியமூர்த்தி பவனுக்குள் ஓடினர்.
அங்கும் விரட்டிச் சென்று ஓட ஓட விரட்டி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு ஒரே களேவரமாக இருந்தது. இதைப்பார்த்து அங்கிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கபாலு ஆதவாளரான சிவலிங்கம் வந்து தடுத்து அவர்களை சமாதானப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த மோதலின் போது தங்கபாலு சத்திமூர்த்தி பவனுக்குள் இருந்தார். தங்கபாலு ராஜினாமா செய்ததை கேள்விபட்டதும் அவரது எதிர் கோஷ்டியை சேர்ந்த காங்கிரசார் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்தனர்.

No comments:
Post a Comment