சட்டசபை தேமுதிக தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தேமுதிக செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார்.
தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏக்களின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் இதற்காக புதிய எம்.எல்.ஏக்கள் கூடினர்.
பின்னர் இக்கூட்டத்தில் விஜயகாந்த்தை தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக ஒருமனதாக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர்.
இதையடுத்து எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளைக் கூறி பேசினார் விஜயகாந்த்.
'வசவாளர்கள் வாழ்க'-வடிவேலுக்கு 'வாழ்த்து'!:
முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதன் காரணம் தி.மு.க,வை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது.
சிறந்த எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம். மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் சுட்டிக் காட்டி பேசுவோம். அதற்குத் தயங்க மாட்டோம்.
அதிமுக, தேமுதிக இடையிலான உறவு பலமாகவே இருக்கிறது என்றார் விஜயகாந்த்.
வடிவேலு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'வசவாளர்கள் வாழ்க' என்று கருணாநிதி பாணியில் பதிலளித்தார் விஜயகாந்த்.
சட்டசபையில் அதிமுகவுக்கு அடுத்து அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி தேமுதிகதான். எனவே இக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்துள்ளது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார். தேமுதிகவுக்கு அடுத்த இடத்தில்தான் திமுக அமரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment