ஒசாமா பாகிஸ்தானில் இல்லவே இல்லை என்று பாகிஸ்தான் கூறிவந்த நிலையில் அவர் இஸ்லாமாபாத்தில் கொல்லப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானின் சாயம் வெளுத்துவிட்டது.
செம்டம்பர் 11 தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நியாயம் கிடைத்துள்ளது. தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று தெரிவித்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அமெரிக்கர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஒபாமாவின் இந்த இனிய அறிவிப்பைக் கேட்ட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றன.
ஒசாமாவின் மரணம் ஒபாமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. அதே சமயம் பாகிஸ்தானின் முகத்திரை கிழிந்துள்ளது. இத்தனை நாட்களாக ஒசாமா பாகிஸ்தானில் இல்லை, இருப்பது தெரிய வந்தால் நாங்களே உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அந்நாடு கூறி வந்தது. தற்போது அமெரிக்கப்படை ஒசாமாவை பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 150 கிமீ தொலைவில் உள்ள அபோத்தாபாதில் வைத்து கொன்றுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகில்தான் பின்லேடன் தங்கியிருந்த கட்டடம் உள்ளது. இப்படி தங்களுக்குப் பக்கத்திலேயே பின்லேடனை வைத்துக் கொண்டு அவர் இல்லவே இல்லை என்று பாகிஸ்தான் நாடகமாடி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பாகிஸ்தானில் பின்லேடன் இல்லை, அவர் இறந்து போய் விட்டார் என்று பாகிஸ்தான் இத்தனை காலம் கூறி வந்ததும் பொய்யே என்பதும் நிரூபணமாகியுள்ளது.
அதை விட முக்கியமாக முஷாரப் அதிபராக இருந்தபோது பின்லேடன் இறந்து போய் விட்டார் என்று திட்டவட்டமாக கூறி வந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இத்தனை காலமாக பின்லேடனை கட்டிக் காத்து வந்தது பாகிஸ்தான் அரசும், அதன் ஐ.எஸ்.ஐயும்தான் என்று திட்டவட்டமாக நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment