உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினி நலம் பெற வேண்டி, புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர் ரசிகர்கள்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் பூரண குணம் அடைய வேண்டி தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ரசிகர்கள் பண்ணாரி அம்மன் கோவிலில் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அதன் பிறகு 51 பேர் கோவிலில் தங்க ரதம் செல்லும் பாதையில் அங்க பிரதட்சணம் செய்து வலம் வந்தனர். சில ரசிகர்கள் மொட்டை போட்டு முடிகாணிக்கை செலுத்தினார்கள்.
இந்த நிலையில் பவானிசாகர் ஒன்றிய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாலை 5 மணி அளவில் பண்ணாரி அம்மன் கோவிலில் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ரசிகர்கள் கோவிலில் தங்கத்தேரை இழுத்து வலம் வந்தனர்.
ஈரோடு மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் தங்க தேரை இழுத்து தொடங்கி வைக்கப்பட்டது. பவானிசாகர் ஒன்றிய செயலாளர் எஸ்.செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் பிரபு, லட்சுமணன் ஆகியோர் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினார்கள்.
வீரபாண்டி கோயிலில் அங்கப்பிரதட்சணம்
தேனி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் சார்பில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ரஜினி காந்த் விரைவில் குணம் அடைய வேண்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
முன்னதாக ரசிகர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர். மேலும் ஆதரவற்றகுழந்தைகள் சார்பாக சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வந்த சுமார் 2 ஆயிரம் பேருக்கு பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சிறப்பு பூஜை நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment