விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு மனித குலம் பார்த்திராத அளவு போர்க்குற்றம் செய்திருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்தியாவின் ஆதரவு அவசியமாகிறது என ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது பொதுமக்கள் வாழும் பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதால், அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த போர்க்குற்றத்தின் மூலம், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக ஐ.நா., பொது செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட மூவர் குழு சமீபத்தில் அறிக்கை சமர்பித்தது.
இறுதி கட்டப் போரின் போது அத்துமீறல்கள் நடந்துள்ளதாக இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ராஜ பக்சே மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவற்றின் மீது விசாரணை நடத்தப்பட்டால், அவருக்கு மரண தண்டனைக் கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த குழு அளித்த அறிக்கை குறித்து, இலங்கையிடம் விசாரிப்பதற்காக, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், வெளியுறவு செயலர் நிருபமா ராவ் ஆகியோர் இலங்கை செல்ல உள்ளனர்.
இது குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே குறிப்பிடுகையில், "இந்தியா எல்லா காலங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைத்து வருகிறது. எனவே, இந்தியாவுடனான எங்களது உறவு எப்போதும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. ஐ.நா., குழு அளித்துள்ள அறிக்கையை நாங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. இதற்கான விளக்கத்தை தக்க முறையில் பான் கி மூனிடம் எடுத்து சொல்வோம். இதனால், ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. உதவும் என்று நம்புகிறோம்," என்றார்.
ஏற்கெனவே நிபுணர் குழு அறிக்கை பற்றி கருத்து கூறாமல் மவுனம் சாதித்து வருகிறது இந்திய அரசு. மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த அறிக்கையை விவாதிக்கவும் எதிர்ப்புக் காட்டி வருகின்றன இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களை முக்கிய காலகட்டத்தில் கைவிட்டு, பல ஆயிரம் பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்தது என்ற பழிச் சொல்லிலிருந்து இப்போதாவது இந்தியா மீள முயலுமா, அல்லது இனப்படுகொலையாளி எனப்படும் ராஜபக்சேவுடன் ரத்தக் கறை படிந்த கைகளைக் குலுக்குமா என்பதை தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த கவலையுடன் கவனித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment