பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவால் தேடப்படும், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 50 அதி பயங்கர குற்றவாளிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. இவர்களில் முதல் இடத்தில் லஷ்கர் இ தொய்பா தலைவனான ஹபீஸ் சயீத் பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்தியா இதுபோல எத்தனையோ முறை பல பட்டியல்களை பாகிஸ்தானிடம் கொடுத்து விட்டது. ஆனால் அதை வாங்கி குப்பைக் கூடையில் போடுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது பாகிஸ்தான்.
இந்த நிலையில் தற்போது பின்லேடனை அதிரடியாக சுட்டுக் கொன்றுள்ள அமெரிக்காவைப் பார்த்து அதே பாணியில் இந்தியாவும் செயல்பட்டு மும்பையில் பயங்கரவாத செயலை அரங்கேற்றிய லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், நீண்ட காலமாக இந்தியாவால் கோரப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம் போன்றோரை இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கான வாய்ப்பில்லை என்று மத்திய அரசு கூறி விட்டது. இருப்பினும் பின்லேடன் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எழுந்துள்ள சர்வதேச நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது இந்தியா.
இதைத் தொடர்ந்து இந்தியாவால் தேடப்பட்டு வரும், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 50 அதி பயங்கர குற்றவாளிகளின் பட்டியலைத் தயாரித்து அதை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியுள்ளது. இப்பட்டியலை இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறான் சயீத். இவன்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை நிறுவியவன். அந்த அமைப்புக்கு அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து வேறு பெயரில் இயங்கி வருகிறான். மும்பையில் 3 நாட்கள் தீவிரவாதிகள் அரங்கேற்ற அதி பயங்கர தீவிரவாத சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியவன் இவனே.
அதேபோல ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவன் சயீத் சலாஹுதீன் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவால் நீண்ட காலமாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம், அவனது தம்பி அனீஸ் இப்ராகிம், டைகர் மேனன், சோட்டா ஷகீல் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 பேரில் 21 பேர் தாவூத் முகாமைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் போக பாகிஸ்தான் ஐஎஸ்ஐயைச்சேர்ந்த மேஜர் இக்பால் (இவன் மீது அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.), மும்பை தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியும் அளித்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் சமீர் அலி, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இலியாஸ் காஷ்மீரி ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு முக்கிய நபர் மசூத் அஸார். இவன் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய்ப புள்ளி ஆவான். இவனைத்தான் கடந்த பாஜக ஆட்சி, தீவிரவாதிகளிடம் பத்திரமாக கொண்டு போய் ஒப்படைத்தது என்பது நினைவிருக்கலாம்.
இப்பட்டியலில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் போக 2008 பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ரஷீத் அப்துல்லா என்கிற அபு ரெஹான், லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த சீமா அஸாம், சையத் சைபுதீன் ஜபி, இப்ராகிம் அத்தார், அஸார் யூசுப், மிஸ்ரி ஸாகுர் இப்ராகிம் என்கிற போலா, சயீத் ஷாஹித் அக்தர், ஷகீர் முகம்மது என்கிற ராம் கோபால் வர்மா, அப்துல் ராப், சுபியான் முப்தி, யாக்கூப் கான் பதான் உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

No comments:
Post a Comment