நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக 20 நாட்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கடந்த மாதம் 19ஆம் தேதி கொடநாடு சென்றார்.
அங்கிருந்தவாறே பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கட்சி ரீதியான பணிகளில் ஜெயலலிதா ஈடுபட்டிருந்தார்.
கொடநாட்டில் கடந்த 20 நாட்களாக தங்கியிருந்த ஜெயலலிதா, இன்று (9.5.2011) கொடநாட்டில் இருந்து
ஹெலிகாப்டரில் மதியம் 12 மணியளவில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் கோவை விமான நிலையம் வந்தடைந்தது.
கோவை விமான நிலையத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் சிறப்பான வரவேற்பு
அளிக்கப்பட்டது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் மலரவன், எஸ்.பி.வேலுமணி, ஓ.கே.சின்னராஜ், செ.ம. வேலுச்சாமி, எம்.பி.க்கள் சுகுமார், வேலுச்சாமி, முன்னாள் எம்.பி.தியாக ராஜன், சொக்கம்புதூர் செந்தில், சேலஞ்சர் துரை, வி.சி.ஆறுக்குட்டி, ஜப்பார், சிறுவாணி பட தயாரிப்பாளர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் உள்பட பலர் பங்கேற்று வழியனுப்பு வைத்தனர்.
மதியம் 1 மணிக்கு தனி விமானம் மூலம் ஜெயலலிதா சென்னை வந்தார். அவருடன் சசிகலாவும் வந்தார். விமான நிலையத்தில் ஜெயலிதாவை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்கள், கனிமொழி மீதான வழக்கு குறித்து கேட்டனர்.
அதற்கு ஜெயலலிதா பதிலளிக்க மறுத்துவிட்டார். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் 14ம்
தேதிக்குப் பிறகு பதிலளிப்பதாக கூறிச் சென்றார்.

No comments:
Post a Comment