சென்னை அருகே பெண் ஒருவரை கொலை செய்ததாக நடிகர் தமிழரசன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருக்கிறார். சினிமாவில் ஏற்பட்ட நாட்டத்தால் கடந்த ஆண்டு சினிமாவில் நுழைந்த தமிழரசு மண்டபம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி கவிதா ஒரு வழக்கு தொடர்பாக தமிழரசனை சந்தித்து இருக்கிறார். இதனையடுத்து கவிதாவின் வழக்கு விசாரனையை மேற்கொண்ட தமிழரசு வழக்கு விஷயமாக சிலரை சந்திக்க கவிதா மற்றும் அவரது தோழியும் துணை நடிகையுமான அலமேலு மற்றும் தமிழரசு ஆகியோர் ஒரு காரில் மதுராந்தகம் சென்றனர். அப்போது பழைசீவரம் அருகே ஆற்றங்கரையில் கத்திகுத்து காயங்களுடன் கவிதா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சில், ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கவிதா இறந்துவிட்டார். ஆம்புலன்சில் செல்லும் போது தமிழரசன் தான், தன்னை கத்தியால் குத்தியதாக கவிதா கூறியிருக்கிறார். இதனை ஆம்புலன்சில் வந்தவர்கள் போலீசில் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.
இதனிடையே தமிழரசன், கவிதாவை நான் கொலை செய்யவில்லை என்றும், காரில் நாங்கள் செல்லும் போது மர்ம கும்பல் ஒன்று கவிதாவை கத்தியால் குத்தியதாகவும், நானும், துணை நடிகை அலமேலுவும் அந்த கும்பலிடமிருந்து தப்பித்து ஓடி விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment