கிரேட்டர் நொய்டா: உ.பி., போலீசாருக்கு தகவல் கொடுக்காமல், நேற்று அதிகாலையில் மோட்டர் சைக்கிளில், கிரேட்டர் நொய்டா மாவட்டம், பட்டா பர்சவுல் கிராமத்திற்கு வந்த ராகுல், அங்கு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்ததோடு, அவர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். அவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
உ.பி., மாநிலம், நொய்டா உள்ளிட்ட நகரங்களில், சாலை அமைப்பது உள்ளிட்ட, அரசு திட்டங்களுக்காக, விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு, நொய்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு தரப்பில், தங்களுக்கு தரப்பட்டுள்ள இழப்பீடு மிகவும் குறைவு என்றும் கூறி வருகின்றனர்.சாலை ஆய்வுப் பணிக்காக சென்ற, மாநில அரசின் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மூன்று பேரை, கடந்த சில நாட்களுக்கு முன், விவசாயிகள் பிடித்து வைத்துக் கொண்டனர்.இவர்களை விடுவிப்பதற்காக கடந்த சனிக்கிழமை, ஏராளமான போலீசார், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சவுல் கிராமத்துக்கு சென்றனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. அங்கு திரண்டிருந்த விவசாயிகள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கினர். இதில், இரண்டு போலீசார் பரிதாபமாக பலியாயினர். போலீசாரும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு விவசாயிகள் பலியாயினர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு பட்டா பர்சவுல் கிராமத்திற்கு, பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல், உ.பி., போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், ஒரு மோட்டார்சைக்கிளில் ஒருவரின் பின்னால் அமர்ந்து வந்த காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அங்கு விவசாயிகளிடம் பல மணி நேரம் அவர்களின் பிரச்னையை கேட்டறிந்தார்.விவசாயிகளும் அவரைச் சூழ்ந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்தனர். போலீசார் தாக்கியதில், தங்களுக்கு ஏற்பட்ட காயத்தையும், ராகுலிடம் காட்டினர். "கிராமத்தில் உள்ள இளைஞர்களில் நிறைய பேரை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். ஏராளமானவர்கள் பயத்தில் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர்' என்றும் புகார் கூறினர்.
பின்னர் விவசாயிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரி, விவசாயிகளுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பட்டா பர்சவுல் கிராமத்தில் சவுபால் என்ற இடத்தில், நாள் முழுக்க நடந்த தர்ணா போராட்டத்தில், ராகுலுடன் மற்றொரு காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய்சிங்கும் பங்கேற்றார்.
இதையடுத்து, ராகுலைச் சந்தித்த மாவட்ட துணை கலெக்டர் விஷால் சிங், "பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு தர்ணா போராட்டத்தை அவர் கைவிட வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். மேலும், ராகுல் திடீரென கிராமத்திற்கு வந்ததால், தன்னால் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
அதற்குப் பதில் அளித்த ராகுல், "கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிப்பது உட்பட அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் உ.பி., மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் கிராமத்தை விட்டுச் செல்வேன். காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருக்கும். அவர்களின் நலனுக்காக பாடுபடும். உ.பி., அரசின் நிலம் கையகப்படுத்துதல் கொள்கை, விவசாயிகளுக்கு எதிரானது' என, திட்டவட்டமாகக் கூறினார்.
ராகுலுடன் தர்ணாவிடம் ஈடுபட்ட திக்விஜய்சிங் கூறுகையில், "விவசாயிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவரை விவசாயிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்' என்றார்.
விவசாயிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, பட்டா பர்சவுல் கிராமத்தில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தும், மோட்டார் சைக்கிளில் எப்போது ராகுல் வந்தார் என்பதை யாரும் கவனிக்கவில்லை. விவசாயிகளை சந்தித்து ராகுல் குறை கேட்கத் துவங்கிய பின்னரே, அவர் வந்துள்ளதை போலீசார் பார்த்துள்ளனர்.ராகுல் பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் யார் என்பதும் தெரியவில்லை.தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுலையும், திக்விஜய் சிங்கையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, காரில் ஏற்றி செல்லப்பட்டார். அவரை கொண்டு செல்லும் இடத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. அவர் இன்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று மீரட் சரக போலீஸ் ஐ.ஜி. ரஜினிகாந்த் மிஷ்ரா தெரிவித்தார்.
No comments:
Post a Comment