எப்படியும் நாளை பகல் வேளையில், தமிழகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகி விடும் என்ற நிலையில், ஜோதிடத்தில் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து, உலக ஜாதகம், எண் கணிதம், தலைவர்களின் ஜாதகங்கள், கிரக பெயர்ச்சிகள், தேர்தல் நடந்த நாள், முடிவு வெளியாகும் நாள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, நாளை தமிழகத்தை ஆளப்போவது யார் என்பதை கணித்து, ஜோதிடர்கள் பலர் கணிப்புகளை
வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தேர்தல் நடந்த ஏப்., 13லிருந்து, மே 13ம் தேதி வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில், குருப் பெயர்ச்சி நடந்துள்ளது. அடுத்து புதிய அரசு பதவியேற்கும் சமயத்தில், ராகு, கேது பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இப்படியொரு நிலை இதற்கு முன் இருந்ததில்லை. இத்தனையையும் மீறி, இதுதான் நடக்கும் என உறுதி தெரிவித்து வெளியிட்ட, "தில்'லான ஜோதிடர்களின் கணிப்புகள் இதோ:
சென்னை திருவல்லிக்கேணி, சந்தனலிங்கம் ரமேஷ் (மொபைல்: 96772 80866) : தெய்வ வாக்கின்படி, இந்த முறை ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாக தெரிகிறது. தி.மு.க.,விற்கு இது கடுமையான சோதனைக் காலம். அ.தி.மு.க., அதிக இடங்களில் வென்று ஆட்சிப் பீடம் ஏறுவது உறுதி. தேர்தல் முடிவிற்கு பின், தி.மு.க.,வின் நிலை கடும் பாதிப்படையும். காங்கிரசுடன் பிணக்கு ஏற்படும். மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படும். அரசியலில் நிலைத்தன்மை இருக்காது. கருணாநிதியின் வாரிசுகள், கடும் சோதனையை சந்திக்க நேரிடும். இம்முறை அமையும் அ.தி.மு.க., ஆட்சி, வெகு சிறப்பானதாக இருக்கும்.
ஆற்காடு ஜோதிடர் ஆ.செ.ந.சோம சேகரன் (மொபைல்: 93671 50888) : கருணாநிதியின் பிறந்த தேதி, 03.06.1924; மிருகசீரிஷ நட்சத்திரம். ரிஷப ராசி. கடக லக்னத்தில் பிறந்த இவருக்கு, கோசார ரீதியாக நேரம் சரியில்லை என்றாலும், தற்போது சுக்ர தசை சூரிய புக்தி மிக சாதகமாக உள்ளது. ஜெயலலிதாவின் ஜாதகப்படி, தற்போது நல்ல தசை புத்திகள் நடைபெறுவதாலும், குருப் பெயர்ச்சி மிக சாதகமாக உள்ளதாலும், கருணாநிதியை விட சில இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.விஜயகாந்தின் பிறந்த தேதி, 25.08.1952. சித்திரை நட்சத்திரம், துலா ராசியில் பிறந்த இவருக்கு, கோசார ரீதியாக குரு நன்றாக இருந்தாலும், நடக்கின்ற புதன் தசை, கேது புக்தி சரியில்லாததால், இவர் எதிர்பார்க்கும் இடங்களை விட சற்று குறைவான இடங்கள் கிடைக்கும். ஜெகத் ஜாதகத்தில் லக்னாதிபதியான, புதன் நீசமடைவதால், கூட்டணி கட்சிகள் பெறும் சில இடங்களும், கலியுக தர்மப்படி விலை போகும் கட்சிகளுமே, அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய சக்தியாக இருப்பர்.
புவனகிரி ஜோதிடர் சிவஅண்ணாமலை தேசிகன் (மொபைல்: 96002 33910) :லக்னத்தின் அடிப்படையிலான என் கணிப்பின்படி, இந்த தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். சுக்கிரன் உச்சம் பெற்றுள்ள நிலையில், அவர், ஸ்ரீரங்கம் தொகுதியை தேர்வு செய்ததும், அவரின் யோக கிரகமான குரு, 10ல் ஆட்சியில் அமர்ந்துள்ளதால், ஜெயலலிதாவின் செல்வாக்கு கூடும். அதே சமயம், செவ்வாய், ராகு, கேது கிரகங்கள் எதிரியாக செயல்பட்டுள்ளதால், எதிரியின் தவறான செயல்களாலும், நடவடிக்கையாலும், வெற்றியில் சந்தேக தன்மையை ஏற்படுத்தும். ஆனாலும், குரு பலம், அவருக்கு கைகொடுக்கும். இருப்பினும், கூட்டணி நண்பர்களின் தொல்லையை அவர் சந்திக்க நேரிடும். பிரச்னைகளுக்கு இடையேயே அவரது ஆட்சி பயணிக்கும். கடக லக்னத்திற்கு, 10ல் குரு அமர்வதால், கருணாநிதியின் பதவி பறிபோகும். காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். சோனியாவின் பதவிக்கும் பாதகம் ஏற்படும். கடந்த கால நட்பு, பகையாக மாறும்.
விழுப்புரம் ஜோதிடர் சிவகுரு ரவி (மொபைல்: 98946 76928) : ஆங்கில புத்தாண்டு, சனி பிரதோஷ நாளில், விருச்சிக ராசியில், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது. இது சனியின் ஆதிக்கம். சந்திரன் நீச்ச ஸ்தானத்தில், நீச்ச பங்க குருவின் ஒன்பதாம் பார்வை பதிந்து சிறப்படைகிறது. அரசியலில் ராஜ கலகம் நிகழும்; மாற்றம் ஏற்படும். "கர' ஆண்டு சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில், கேது மகா திசையில் பிறந்துள்ளது. அனைத்து கிரகங்களும் பெயர்ச்சியாகும் சிறப்பும், இந்த ஆண்டிற்கு உண்டு. இது, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஆண்டாக அமையும். ஜெயலலிதா வெற்றிநடை போடுவார்; சாதனைகள் புரிவார்; இவரின் கூட்டணி வெற்றி பெறும்.
திருக்கோவிலூர் மணம்பூண்டி பரணிதரன் (மொபைல்: 98408 20560) : தேர்தல் முடிவு வெளிவரும் மே 13 அன்று, ஓட்டு எண்ணிக்கை துவங்கும் நேரம், மிதுன லக்கினம், உத்ரம் நட்சத்திரம், கன்னி ராசியாகும். மேஷத்தில் சூரியன், செவ்வாய், குரு, புதன், சுக்ரன், மிதுனத்தில் கேது, கன்னியில் சந்திரன், சனி, தனுசில் ராகு அமர்ந்துள்ளனர். தேர்தல் நடந்த நாள், முடிவு வெளியாகும் நாள் இவற்றையும், கருணாநிதியின் ஜாதகத்தையும் ஆராய்ந்தால், குருவும், சனியும் அவருக்கு அதிக கெடுபலன்களை அளிக்கின்றனர். இப்படி பல்வேறு இயல்புகளையும் நோக்கும் போது, கருணாநிதி தலைமையிலான கூட்டணிக்கு, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை. ஜெயலலிதாவின் ஜாதகத்தை பார்க்கும் போது, சூரியன் ராஜயோகத்தை வழங்குவார். ஜெயலலிதாவிற்கே முதல்வராகும் யோகம் இருப்பதை கிரகங்கள் உணர்த்துகின்றன.

No comments:
Post a Comment