கடந்த தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் இருந்த, 10 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., ஐந்து இடங்களிலும், தி.மு.க., கூட்டணி ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போது, தொகுதி மறுசீரமைப்பில், எட்டு தொகுதிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக, தஞ்சை மாவட்ட நிலவரம்: தஞ்சாவூர்: தி.மு.க., சார்பில், வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லாவும், அ.தி.மு.க., சார்பில், தஞ்சை வடக்கு மாவட்ட செயலர் வக்கீல் ரெங்கசாமியும் மோதினர். தொடர்ந்து 17 ஆண்டுகள், எம்.எல்.ஏ.,வாகவும், இதில் ஐந்தாண்டுகள் அமைச்சராக இருந்தும் உபயதுல்லா எந்த ஒரு வளர்ச்சி பணியையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், தி.மு.க.,வின் கோஷ்டி பூசல், வேட்பாளர் மீதான அதிருப்தி, தொகுதி மறுசீரமைப்பால் மாறிய பகுதிகள் தங்களை கரை சேர்க்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர். தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட தஞ்சையில், அ.தி.மு.க., கொடி பறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
திருவையாறு: தி.மு.க., வேட்பாளராக பூதலூர் ஒன்றிய செயலர் கல்லணை செல்லக்கண்ணுவும், அ.தி.மு.க., வேட்பாளராக ரெத்தினசாமியும் களத்தில் இருந்தனர். தொகுதி மறுசீரமைப்பில், தஞ்சை ஒன்றியத்தில் இருந்து சேர்க்கப்பட்ட பகுதிகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும். ஐ.ஜே.கே., வேட்பாளர் பெறும் ஓட்டுகள் ஆகியவற்றை பொறுத்தே, அ.தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு அமையும்.
பாபநாசம்: "சிட்டிங்' அ.தி.மு.க., எம்.எல்.ஏ., துரைக்கண்ணுவும், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராம்குமாரும் மோதினர். இத்தொகுதியை எதிர்பார்த்து ஏமாந்த கிருஷ்ணசாமி வாண்டையார் ஆதரவாளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
மத்திய அமைச்சர் வாசனின் சொந்த தொகுதி என்பதாலும், கடந்த முறை தோல்வியடைந்ததாலும், இம்முறை எப்படியும் தொகுதியை தக்க வைக்க மூப்பனார் குடும்பம் பகீரத முயற்சியில் ஈடுபட்டது. இருப்பினும், பலமான, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி மற்றும் கூட்டணிக் கட்சியின் ஒத்துழைப்பால், மீண்டும் இரட்டை இலையே துளிர்க்கும் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.
கும்பகோணம்: தி.மு.க., சார்பில் அன்பழகனும், அ.தி.மு.க., சார்பில் ஐந்து முறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றி பெற்ற ராம.ராமநாதனும் மோதினர். கோ.சி.மணி மற்றும் அவரது மகன் இளங்கோவன் தலைமையால் ஒதுக்கப்பட்டதை, உண்மையான, தி.மு.க.,வினர் ரசிக்கவில்லை. அதன் பாதிப்பு தேர்தலில், தி.மு.க.,வுக்கு பாதகமாக எதிரொலிக்கலாம். அ.தி.மு.க., வேட்பாளரை பொறுத்தவரை நான்கு முறை தொடர் தோல்வியால் கிடைத்த அனுதாபம், தொகுதியில் கணிசமாக உள்ள பிராமணர்கள் மற்றும் சவுராஷ்டிரா சமூகத்தினரின் ஓட்டுகள் மற்றும் பொதுவான பிரச்னைகள், அ.தி.மு.க.,வை கரை சேர்த்துவிடும் என எண்ணுகின்றனர். வெற்றி, தோல்வி இழுபறியாக இருக்கும்.
திருவிடைமருதூர் (தனி): அ.தி.மு.க., சார்பில், பாண்டியராஜனும், தி.மு.க., சார்பில், பாண்டியராஜனும் மோதினர். கடந்த தேர்தலில் இத்தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெற்று அதிர்ச்சியை கொடுத்தது. அதே அதிர்ச்சி, இம்முறையும் தொடரும் என்கின்றனர், அ.தி.மு.க.,வினர். இத்தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் அரசன் சுயேச்சையாக களம் இறங்கி, தி.மு.க.,வுக்கு வேட்டு வைத்துள்ளார். கடந்த தேர்தலில், பா.ம.க., வேட்பாளரின் வெற்றி தி.மு.க.,வின் உள்ளடி வேலையால் பறிபோனது. அதை இம்முறை, பா.ம.க.,வினர் செய்துள்ளனர்.
ஒரத்தநாடு: அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சரும், "சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான வைத்திலிங்கமும், தி.மு.க., சார்பில் திருவோணம் தொகுதி "சிட்டிங்' எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமியும் மோதினர். மாவட்ட செயலர் பழனிமாணிக்கம் எதிர்ப்பையும் மீறி சீட் பெற்று, கட்சியினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மகேஷ் கிருஷ்ணசாமியால், மக்கள் மத்தியில் ஜொலிக்க முடியவில்லை. எளிமையான அணுகுமுறை, பணபலம், படைபலத்துடன் தஞ்சை மாவட்டத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், ஒரத்தநாட்டில், அ.தி.மு.க., வெற்றி பெறும் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
பட்டுக்கோட்டை: தே.மு.தி.க., சார்பில், செந்தில்குமார், காங்கிரஸ் சார்பில், "சிட்டிங்' எம்.எல்.ஏ., ரெங்கராஜன், சுயேச்சையாக காங்கிரஸ் பிரமுகர் யோகானந்தம் மோதினர். பட்டுக்கோõட்டையில் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் யோகானந்தம், அவர் சார்ந்த சமுதாய ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல் பெற்றால் வெற்றிக்கோட்டை நெருங்கலாம். அதேபோல், ஜாதி பார்க்காமல் கட்சி பார்த்து ஓட்டளித்தால், தே.மு.தி.க.,வும் வெற்றி படிக்கட்டில் அமரலாம். மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
பேராவூரணி: தே.மு.தி.க., சார்பில் நடிகர் அருண்பாண்டியன், காங்கிரஸ் சார்பில் மகேந்திரன், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் திருஞானசம்மந்தம் ஆகியோர் களத்தில் இருந்தனர். இதில், திருஞானசம்மந்தத்துக்கு, வாசனின் பரிபூரண ஆசி உண்டு. அதனால், ராகுல் நிறுத்திய அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்ய வரவில்லை. பலமான அ.தி.மு.க., ஓட்டு வங்கி உதவியுடன், தே.மு.தி.க., முன்னேறினாலும், தி.மு.க., கூட்டணி பலத்துடன் காங்கிரசும், ஜாதி பலத்துடன் சுயேச்சையும், ஒருவரை ஒருவர் துரத்துகின்றனர்.

No comments:
Post a Comment