அல்கொய்தா இயக்கத்தில் சேர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது மேலை நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களிலோ ஈடுபடக் கூடாது என தனது மகன்களுக்கு பின்லேடன் உயில் எழுதி வைத்துள்ளார்.
அல்கொய்தா இயக்கத் தலைவரும் சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றனர்.
இந்த நிலையில் பின்லேடன் எழுதி வைத்த உயில் ஒன்றை குவைத் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.
2001-ம் ஆண்டு இறுதியில் நடந்த அந்த தாக்குதலில், அமெரிக்க ராணுவத்திடம் இருந்து பின்லேடன் தப்பினார். அதன் பிறகு, டிசம்பர் 14-ந் தேதி அன்று இந்த உயிலை பின்லேடன் எழுதியதாக குவைத் பத்திரிகை தெரிவித்துள்ளது. 4 பக்கங்களை கொண்ட அந்த உயிலில் பின்லேடன்,
அல்கொய்தா இயக்கத்தின் மூலமாக ஏராளமான தாக்குதல்கள் நடந்தன. 1983-ம் ஆண்டு லெபனானில் அமெரிக்க கப்பல்கள் தகர்க்கப்பட்டன. 1993-ம் ஆண்டு சோமாலியாவில் ஐ.நா. அமைதிப் படையில் இடம்பெற்ற அமெரிக்க கடற்படை மீது நடத்திய தாக்குதலில் 19 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 1998-ம் ஆண்டு வெடிகுண்டு வீசப்பட்டது.
எனது தலைமையிலான அல்கொய்தா நடத்திய தாக்குதல்களிலேயே மிகப் பெரியதாக 2001-ம் ஆண்டு நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு விளங்குகிறது. புனிதப் போரில் எனது செயல்களில் பெரிய சாதனையாக நியூயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதலை கருதுகிறேன்.
என்னுடைய குழந்தைகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது நேரத்தில் சிறிய பகுதியை கூட அவர்களுக்காக என்னால் செலவிட முடியவில்லை.
புனிதப் போரில் (ஜிகாத்) என்னுடைய பங்கு அவசியம் என்பதால் குழந்தைகளுடன் நேரத்தை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன்.
எனது குழந்தைகள் யாரும் அல்கொய்தா இயக்கத்தில் சேரவோ அல்லது மேலை நாடுகளுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடவோ கூடாது.
அதுபோல, எனது மரணத்துக்கு பிறகு எனது மனைவிகள் அனைவரும் மறு திருமணம் செய்யக் கூடாது. என்னை சுற்றி சூழும் நம்பிக்கை துரோகத்தாலேயே எனக்கு மரணம் நேரிடும் என கருதுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த 4 பக்க உயிலின் அடியில், `உங்களுடைய சகோதரன் அபு அப்துல்லா ஒசாமா முகமது பின்லேடன்' என எழுதப்பட்டுள்ளது. பின்லேடனுக்கு 4 மனைவிகளும் 24 பிள்ளைகளும் இருக்கின்றனர். உயிலில், தனது சொத்துகளைப் பற்றி எதையும் பின்லேடன் தெரிவிக்கவில்லை. தந்தை வழியில் மட்டும் ரூ.90 கோடி மதிப்பிலான சொத்துகள் பின்லேடன் பெயரில் இருப்பதாக கருதப்படுகிறது.
கடந்த 2002-ம் ஆண்டிலேயே இந்த உயிலைப் பற்றி `வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஆனால், அந்த உயில் பொய்யானது என அல்கொய்தா இயக்கம் மறுப்பு தெரிவித்தது. எனினும், அந்த உயில் உண்மையானது என அமெரிக்க உளவுத்துறை உறுதி செய்தது.

No comments:
Post a Comment