பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமா பின் லேடனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட திசுவிலிருந்த டிஎன்ஏவை, இறந்து போன அவரது சகோதரியின் மூளை திசுவிலிருந்து எடுத்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அது பின் லேடன் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது சிஐஏ.
நியூயார்க்கில் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு உலகம் முழுதும் வசித்து வரும் பின்லேடனின் குடும்ப உறுப்பினர்களை பட்டியல் எடுத்து, அவர்களில் பெரும்பாலானவர்களின் ரத்த மாதிரியையும் திசுக்களையும் எடுத்து டிஎன்ஏ 'சிக்னேச்சரையும்' பதிவு செய்து வைத்துவிட்டது.
வழக்கமாக ஒரு நபரின் டிஎன்ஏ அவரது பெற்றோர் அல்லது குழந்தையின் டிஎன்ஏவோடு 50 சதவீதம் தான் ஒத்து இருக்கும். இன்னொரு 50 சதவீத டிஎன்ஏ அவருக்கே உரிய தனித்துவத்துடன் இருக்கும்.
இதனால் டிஎன்ஏ மேட்சிங் செய்யும்போது ஏற்படும் குறையைக் கலைய, பெற்றோர், குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவுகளின் டிஎன்ஏக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இதன்மூலம் குறையை (error) கலைய முடியும்.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாகவே பின்லேடனின் பல உறவினர்களிடமும் சிஐஏ டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வந்தது.
ஆனால், பின்லேடனுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை. அவரது சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது சகோதரர்கள் தான் (siblings). இவர்களில் பெரும்பாலானவர்கள், பின்லேடன் தீவிரவாதப் பாதைக்குத் திரும்பியவுடனேயே அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டவர்கள்.
இதில் ஒரு சகோதரி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்து வந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் மசாசூசெட்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானவுடன், அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உதவியோடு, அந்தப் பெண்ணின் மூளையில் இருந்து திசுக்களில் இருந்து டிஎன்ஏ மாதிரியை எடுத்து வைத்திருந்தனர்.
பின்லேடன் கொல்லப்பட்டவுடன், அவரது உடலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவை அவரது இந்த உறவினர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவோடு ஒப்பிட்டபோது 99.9 சதவீதம் இது பின்லேடன் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தவிர பாகிஸ்தானில் பிடிபட்ட பின்லேடனின் இரு மனைவிகளிடமும் அவரது உடலை அமெரிக்கப் படையினர் காட்டி, அது பின்லேடன் தான் என்று உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக டிஎன்ஏ மேட்சிங் செய்ய 14 நாட்கள் வரை ஆகும். ஆனால், கடந்த ஆண்டு அரிசோனா பல்கலைக்கழகத்தின் நுண்ணியிரியல் பிரிவு ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தது. 2 மணி நேரத்தில் டிஎன்ஏ மேட்சிங் செய்யும் அந்த அதிநவீன கருவியை சிஐஏ, ஆப்கானில்தானில் தயார் நிலையில் வைத்திருந்தது.
பின்லேடனின் உடலை அங்கு கொண்டு சென்று டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டு, இது 99.9 சதவீதம் பின்லேடன் தான் என்று தகவல் தரப்பட்ட பின்னரே தொலைக்காட்சிகள் முன் தோன்றி அவர் கொல்லப்பட்டதை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
ஆனாலும் மிச்சமுள்ள 0.1 சதவீத சந்தேகத்தை வைத்து இது பின்லேடன் இல்லை என்று வாதிடுவோர் நிச்சயம் இருக்கத் தான் செய்வார்கள் என்கிறார், டிஎன்ஏ ஆராய்ச்சியாளரான கி்ட் ஏடன்.
No comments:
Post a Comment