அல் கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்படுவதை வீடியோ மூலம் நேரடியாக பார்த்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அவர் மட்டுமல்லாமல் ஹில்லாரி கிளிண்டன் உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்கள் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.
ஒபாமா, ஹில்லாரி தவிர துணை அதிபர் ஜோ பிடனும் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
வெள்ளை மாளிகையின் நெருக்கடி கால அறையில் அமர்ந்தபடி இந்த வீடியோக் காட்சிகளை அவர்கள் பார்த்துள்ளனர். பின்லேடனை சுட்டு வீழ்த்திய வீரர்களில் ஒருவரது ஹெல்மட்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த வீடியோ காமரா மூலம் இந்தக் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி அதைத்தான் ஒபாமா குழுவினர் பார்த்துள்ளனர்.
பின்லேடனை இடது கண்ணில் அமெரிக்க வீரர் சுட்டுத் தள்ளியதை நேரில் பார்த்துள்ளார் ஒபாமா. அவ்வாறு சுட்டதும் பின்லேடன் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அந்த வீரர் மீண்டும் பின்லேடனின் இடதுபுற நெஞ்சில் சுட்டு மரணத்தை உறுதி செய்துள்ளார்.
இந்த வீடியோவில், பின்லேடனை அவரது மனைவி காப்பாற்ற முயற்சித்து பின்லேடனுக்கு முன்னால் வந்து நிற்பது போன்ற காட்சியும் இருப்பதாக தெரிகிறது.
ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பின்லேடன் பாதுகாவலர்கள்:
ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஹெலிகாப்டர்களில் சென்ற அமெரிக்கக் கடற்படை சீல்கள் பிரிவைச் (Navy Seal Team-6) சேர்ந்த கமாண்டோக்கள் தான் இந்த ஆபரேசனை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆனால், இந்த 4 ஹெலிகாப்டர்கள் தவிர மேலும் ஏராளமான போர் விமானங்களும், கனரக ஆயுதம் ஏந்திச் செல்லும் சரக்கு விமானங்களும், மேலும் ஏராளமான வீரர்களைக் கொண்ட சி-15 ரக விமானங்களும், ஆளில்லா உளவு விமானங்களும், ராக்கெட்களை வீசக் கூடிய AC-13 ரக ஹெலிகாப்டர்களும், CH-47, UH-60 ரக ஹெலிகாப்டகள் பலவும் இந்தத் தாக்குதலில் பங்கேற்றிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது.
சீல்கள் வந்த நான்கு CH-47 ஹெலிகாப்டர்களில் ஒன்றை பின்லேடனின் பாதுகாவலர்கள் சுட்டு வீழ்த்தியதும் உறுதியாகியுள்ளது. ஆனால், அது எந்திரக் கோளாரால் செயலிழந்ததால் தாங்களே அதை குண்டுவீசி அழித்துவிட்டதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதில் சில அமெரிக்க வீரர்கள் காயமோ அல்லது உயிரிழந்திருக்கவோ வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதலை 7,000 கி.மீ. தொலைவில் இருந்தபடி ஒபாமாவும் அவரது டீமும் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.
No comments:
Post a Comment